Lead NewsLocal

யாழ்.மானிப்பாயில் துப்பாக்கிச்சூடு! இளைஞர் ஒருவர் துடிதுடித்துச் சாவு!! – மற்றொருவர் படுகாயம்; ஆவாக் குழு என்கிறது பொலிஸ்

யாழ். மானிப்பாயில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன், மற்றொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.

மானிப்பாய் – இணுவில் இணைப்பு வீதியில், சுதுமலை வடக்கு தமிழ்க் கலவன் வித்தியாலயம் (செல்லத்துரை பாடசாலை) முன்பாக நேற்றிரவு 8.40 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

“மோட்டார் சைக்கிள்களில் வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் மானிப்பாயில் வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தச் சென்ற ஆவாக் குழுவினர் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது” என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணகேகர தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் கூறுகையில்,

“மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வாள்வெட்டுக் குழுவினர் தாக்குதல் நடத்தப் போவதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதற்கு அமைவாக கொடிகாமம், சுன்னாகம், கோப்பாய் பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த பொலிஸாரை உள்ளடக்கிய விசேட அணி அந்தப் பகுதியில் களமிறக்கப்பட்டனர்.

பொலிஸ் விசேட அணி சுதுமலை வடக்கு தமிழ்க் கலவன் வித்தியாலயத்துக்கு அருகில் மறைந்திருந்தனர். 3 மோட்டார் சைக்கிள்களில் 6 இளைஞர்கள் வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் முகங்களைக் கறுப்புத் துணியினால் மூடிக் கட்டியவாறு வந்தனர். அவர்களைப் பொலிஸார் மறித்தனர். எனினும், அவர்கள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தாமல் தப்பியோடியபோதே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இதன்போது ஒரு மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு இளைஞர்கள் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகினார்கள். அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர் காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

போலியான இலக்கத் தகட்டைக் கொண்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும், முகத்தை மூடிக்கட்டும் துணிகள் இரண்டும், ஒரு வாள் உட்பட 3 கூரிய ஆயுதங்களும் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டன.

இந்தச் சம்பவத்தில் தப்பியோடியவர்களைத் தேடும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன” – என்றனர்.

“துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்கள் கேட்டன. வெளியில் வந்து பார்த்தபோது மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிள்கள் சில சென்றன. பின்னர் அந்தப் பகுதியில் பொலிஸார் குவிந்து நின்றனர்” என்று சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் தெரிவித்தனர்.

கொடிகாமத்தைச் சேர்ந்த
இளைஞரே உயிரிழந்தார்

மானிப்பாயில் பொலிஸாரின் துப்பாக்கிசூட்டுக்கு இலக்காகிப் பலியான இளைஞர், கொடிகாமம் – கச்சாயைச் சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன் (வயது 23) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞரின் தந்தை புற்றுநோயால் மரணமடைந்த நிலையில் தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்த அவர், குடும்பத்தில் ஒரே ஒரு மகனாவார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading