Lead NewsLocal

மலையகத்துக்கு தனிப் பல்கலை! – சஜித்திடம் 9 தலைப்புக்களின் கீழ் மனோ அணி நேரில் கோரிக்கைகள்

மலையகத்துக்கான தனிப் பல்கலைக்கழகம், கைத்தொழில் பேட்டை, அரச தொழில் வாய்ப்புக்கள் உட்பட 9 பிரதான தலைப்புகளின் கீழ் முக்கியமான பல கோரிக்கைகளை ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிடம் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி முன்வைத்துள்ளது.

தமிழ் முற்போக்குக் கூட்டணியினருக்கும், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கொழும்பிலுள்ள அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் வதிவிடத்தில் நடைபெற்றது.

மலையக மக்களுக்கான அரசியல் உரிமைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளன.

அத்துடன், தமிழ் முற்போக்குக் கூட்டணியால் தயாரிக்கப்பட்டிருந்த கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையும் சஜித்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

* நுவரெலியா மாவட்டத்தில் மலையகத்துக்கான தனிப் பல்கலைக்கழகம் அமைய வேண்டும்,

* தற்போது முன்னெடுக்கப்படுகின்ற வீடமைப்புத் திட்டம் தொடர வேண்டும் என்பதுடன், ஆசிரியர்கள், வேலையில்லாதவர்கள், அரச ஊழியர்கள் ஆகியோரும் வீடமைப்புத் திட்டத்துக்குள் உள்வாங்கப்படவேண்டும்.

* தோட்டப்புறங்களை அண்மித்துள்ள நகரங்களில் வாழும் மலையக மக்களுக்கும் வீடுகளை அமைப்பதற்கு நில உரிமையையும், கடன் திட்டங்களையும் அறிமுகப்படுத்த வேண்டும்.

* கைத்தொழில் பேட்டைகள், ‘நைற்றா’ போன்ற தொழிற்பயிற்சி நிலையங்களும், தொழில்நுட்ப நிறுவனங்களும் நிர்மாணிக்கப்படுதல் அவசியம்.

* ஆசிரியர் சேவைக்கு மட்டுமல்லாமல் அனைத்து அரச துறைகளுக்கும் மலையக இளைஞர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்பதுடன், வேலையில்லாப் பிரச்சினைக்கும் தீர்வு அவசியம்.

* தேர்தல் மறுசீரமைப்பு இடம்பெற்றாலும் உள்ளூராட்சி சபைகள், மாகாண சபைகள், நாடாளுமன்றம் ஆகியவற்றில் மலையகத் தமிழ்ப் பிரதிநிதித்துவத்துக்கான இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும்.

என்பன உட்பட 9 தலைப்புகளின் கீழ் முக்கிய பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றை சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்குச் சாதகமான பதில்களை வழங்கிய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, மலையக மக்களுக்காகத் தனது தந்தை செய்ததை விடவும் பல சேவைகளை செய்வதற்குக் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டார் என்று சந்திப்பில் கலந்துகொண்ட மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் அ.லோரன்ஸ் தெரிவித்தார்.

அத்துடன், சந்திப்பு திருப்திகரமாக அமைந்திருந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கலாநிதி சந்திரபோஸ், பேராசிரியர் சந்திரசேகரன், பேராசிரியர் விஜேந்திரன், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் அ.லோரன்ஸ், ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர் சண். பிரபாகரன் உட்பட புத்திஜீவிகள் குழுவே குறித்த அறிக்கையை தயாரித்துள்ளது.

கடந்த முதலாம் திகதி கூடிய தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அரசியல் குழுவில் அதற்கு அங்கீகாரமும் வழங்கப்பட்டது.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்ருமான மனோ கணேசன், பிரதித் தலைவர்களான அமைச்சர் பழனி திகாம்பரம், அமைச்சர் கலாநிதி வே.இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான அ.அரவிந்குமார்¸ வேலு குமார் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் செயலாளர் நாயகம் சந்திரா ஸாப்ட்டர், மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான சோ.சிறிதரன்¸ எம். உதயகுமார் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading