Local

ஐ.நா. கூறுகின்றவற்றை அப்படியே ஏற்பதில்லை! – அரசு திட்டவட்டம்

இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கூறுகின்ற சகல விடயங்களையும் அப்படியே ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்தார் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகிச் செல்ல வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வில் குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்து உரையாற்றியபோதே திலக் மாரப்பன மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது:-

“எமது நாட்டின் இறைமை, தன்னாதிக்கம் என்பவற்றை பாதுகாத்துக்கொள்ள நாம் தொடர்ச்சியாகச் செயற்பட்டோம்.

எமது பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்ளவும், எமது இறைமைக்கு ஏற்ப மக்களின் மனித உரிமையைப் பாதுகாக்கவும் பொறுப்புடன் செயற்பட்டோம்.

கடந்த காலத்தில் இலங்கைக்கு அவப்பெயர் ஏற்பட்டது. அந்த நிலையை மாற்றியமைத்தோம். மிலேனியம் கோப்பரேசன் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பொருளாதாரத்தை முன்னேற்றப்பாதைக்கு கொண்டுசெல்கின்றோம்.

எமது நாட்டுச் சிப்பாய்கள், சர்வதேசப் படைகளுடன் இணைந்து பணியாற்றுகின்றனர். கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளுகின்றனர்.

எதிர்வரும் 20ஆம் திகதி இலங்கை விடயம் தொடர்பாக ஐ.நாவில் விவாதம் இடம்பெறவுள்ளது. ஐ.நா. ஆணையாளர் கூறும் சகல விடயங்களையும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

இராணுவத்தின் வசமிருந்த காணிகள் விடுவிக்கப்படவில்லையென ஐ.நா. ஆணையாளர் கூறியுள்ளார். அதனை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

பொறுப்புக்கூறல் தொடர்பான செயற்பாடுகளுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு இரண்டு வருட கால அவகாசம் கோரினோம். அந்தக் காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விடயங்களை நாம் காட்டியுள்ளோம். அவ்வாறே இம்முறையும் கால அவகாசத்தைக் கோரியுள்ளோம்” – என்றார்.

இலங்கை சார்பான விளக்கத்தை ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு வழங்குவதற்காகச் செல்லவுள்ள குழுவுக்கு வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமை தாங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading