FeaturesLead NewsLocal

கொலைகாரன் வேண்டுமெனில் கோட்டாவுக்கு வாக்களியுங்கள்! – காலிமுகத்திடலில் இலட்சக்கணக்கான மக்கள் முன் போட்டுத் தாக்கினார் ரணில்

“நாட்டு மக்களுக்குத் தேவை மக்களைக் காக்கும் தலைவனா? அல்லது மக்களைக் கொலை செய்யும் தலைவனா? என்ற கேள்வி இன்று எழுந்துள்ளது. மக்களைக் காக்கும் தலைவன் வேண்டுமானால் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்து அவரை நாட்டின் ஜனாதிபதி ஆக்குங்கள். அவ்வாறு இல்லாமல் நாட்டு மக்களைக் கொலை செய்யும் தலைவன் வேண்டும் என்றால் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களிக்களியுங்கள்.”

– இவ்வாறு பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து முதலாவது பிரதான பரப்புரைக் கூட்டம் கொழும்பு, காலிமுகத்திடலில் இன்று நடைபெற்றது. இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமர் ரணில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சஜித் பிரேமதாஸவை நாங்கள் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்த பின்னர் எமது எதிரணியினர் காலஞ்சென்ற எமது ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவுக்கு எதிராகத் தாக்குதல் தொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

அன்று அவருடன் ஒன்றாக வேலை செய்த அமைச்சர் என்ற வகையில் நான் இது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். ரணசிங்க பிரேமதாஸவினால்தான் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன தேர்தலில் பெரும்பான்மைப் பலத்தில் வெற்றி பெற்றார்.

ரணசிங்க பிரேமதாஸவே குடும்பவாதம், ஏற்றத்தாழ்வுகளை இல்லாதொழித்து நாட்டை நல்ல நிலைமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்தார். நான் ரணசிங்க பிரேமதாஸவின் அரசில் கைத்தொழில் அமைச்சராகப் பணியாற்றினேன்.

அவர் தெளிவான நோக்கத்துடனேயே நாடு முழுவதும் 200 ஆடைத் தொழிற்சாலைகளை திறக்கக் காரணமாக இருந்தார். அவர் செய்த வேலைகளையே சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் நாங்கள் முன்னெடுக்கவுள்ளோம்.

அம்பாந்தோட்டையில் பத்தாயிரம் ஏக்கரில் தொழிற்பேட்டை தேவையில்லையா என்று மஹிந்த மற்றும் கோட்டாபாய ஆகியோரிடம் கேட்கின்றேன்.

காலிமுகத்திடல் மைதானத்தை மேலும் 40 மீற்றர்கள் கடல் பக்கம் விரிவுபடுத்த எண்ணியுள்ளோம். இதேபோன்று பாரிய மாற்றங்களை ஏற்படுத்த எண்ணியுள்ளோம்.

சஜித் பிரேமதாஸ அரசியலுக்கு வந்தபோது, ஏன் மத்திய கொழும்பைத் தெரிவு செய்யவில்லை என்று கேட்டேன். அப்போது தனக்கு அம்பாந்தோட்டை தருமாறு கேட்டார். வறிய மக்களோடு இருக்க வேண்டும் என அவர் என்னிடம் கூறினார்.

அன்றில் இருந்து வறிய மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, குடும்பவாதத்தில் இருந்து மக்களை மீட்டெடுத்து, மக்கள் மத்தியில் இருந்து சஜித் பிரேமதாஸ தலைவராக உருவாகியுள்ளார்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading