Lead NewsLocal

தமிழருக்கு மஹிந்தவை ரொம்பப் பிடிக்குமாம்! – இப்படி இந்தியாவில் கூறியுள்ளார் நாமல்

“மஹிந்த ராஜபக்சவை வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு மிகவும் பிடிக்கும். அவர்களின் மனதில் எனது தந்தை தொடர்ந்து நிலைத்திருக்கின்றார்.”

– இப்படிக் கூறியுள்ளார் முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வனும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச.

மஹிந்தவுடன் இந்தியாவுக்குச் சென்ற நாமல் எம்.பி., அங்கு ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“ராஜபக்ச குடும்பத்துக்கு வடக்கு, கிழக்கில் தனி மரியாதை உண்டு. தமிழ் மக்களுக்குத் தொல்லை கொடுத்த விடுதலைப்புலிகளை நாம் தோற்கடித்தோம்; உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தமிழ் மக்களை மீட்டெடுத்தோம். இதனை தமிழ் மக்கள் மறக்கமாட்டார்கள்.

வடக்கில் புலிகளின் தலைநகராக விளங்கிய கிளிநொச்சி மாவட்டத்தில் எமக்கான ஆதரவு பெருமளவில் இருக்கின்றது.

போரால் சின்னாபின்னமாக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டம் உட்பட வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களும் ராஜபக்சவின் ஆட்சியில் அபிவிருத்தி செய்யப்பட்டது. ஆனால், தற்போதைய ஆட்சியின்போது அந்த மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.

அண்மையில் கிளிநொச்சிக்கு நான் சென்றபோது அங்குள்ள மக்கள் வேதனையுடன் இதனைத் தெரிவித்தார்கள்.

வெள்ள அனர்த்தத்தால் அண்மையில் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு எம்மாலான உதவிகளை நாம் வழங்கினோம்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஒரு போரை விரும்பவில்லை. அவர்களின் மனதில் நாம் என்றும் உத்தம புருஷர்களாக இருக்கின்றோம். ஆனால், தமிழகம் உள்ளிட்ட வெளிநாடுகளில் உயிர் தப்பி சுகபோக வாழ்க்கை வாழும் புலிகள் அமைப்பினருக்கு நாம் போர்க்குற்றவாளிகளாகத் தெரிகின்றோம்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading