Lead NewsLocal

மைத்திரியுடன் மோடி தொலைபேசியூடாக அவசர பேச்சு! கொழும்பு – டில்லி உறவைக் காக்க உறுதி!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறினவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே இன்று பிற்பகல் அவசர தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்ய இந்தியாவின் புலனாய்வுப் பிரிவான ‘றோ’ சதித்திட்டம் தீட்டியுள்ளது என்ற விடயம் இலங்கை – இந்திய ஊடகங்களில் இன்று வெளிவந்துள்ள நிலையில் இந்தத் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரு நாட்டு தலைவர்களும் நட்பு ரீதியான கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், தற்போது இலங்கையில் மேற்கொண்டுவரும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடினர் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சுபீட்சத்திற்கும் அபிவிருத்திக்கும் தேவையான அனைத்துவித உதவிகளையும் வழங்குவதாகவும் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவு தொடர்ந்தும் வலுவுடன் காணப்படும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அயல்நாடுகளுடனும் ஏனைய உலக நாடுகளுடனும் நட்புறவையும் நெருக்கமான தொடர்புகளையும் பேணி பாதுகாப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் இந்தியப் பிரதமர் கூறியுள்ளார்.

நெருங்கிய நண்பனாகவும் அயல்நாடு என்ற வகையிலும் இலங்கையின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் இந்தியாவிடமிருந்து கிடைக்கப்பெறும் ஒத்துழைப்புகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது பாராட்டியுள்ளார் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading