‘சு.க’வை எவராலும் வீழ்த்தவே இயலாது! – கட்சியின் செயலர் தயாசிறி வீராவேசம்
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அழிந்துவிடும். அதன் இறுதிப் பயணம் ஆரம்பமாகிவிட்டது எனச் சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல. எப்படித்தான் வீழ்ந்தாலும் மீண்டெழும் சக்தி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இருக்கின்றது. அக்கட்சியை எவரும் குழிதோண்டிப் புதைக்க முடியாது.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68ஆவது தேசிய மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளர்களால் 47 சதவீதத்துக்கும் மேலான வாக்குகளைப் பெறமுடியாது. எனவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிதான் தீர்மானிக்கும் சக்தி என்பதைக் கூறிவைக்க விரும்புகின்றோம்” என்றார்.
சகல சவால்களையும்
முறியடித்து விட்டோம்
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று சகல சவால்களையம் தாண்டி வந்துள்ளது. எனவே, இன்றிலிருந்து சு.க. வெற்றிப் பாதையிலேயே செல்லும்” என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர இந்த மாநாட்டில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
“இலங்கையை இரு தாசாப்தங்களுக்கும் அதிகமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் ஆட்சி செய்ததைப் போன்று எதிர்வரும் காலங்களிலும் சு.கவின் ஆதரவுடனேயே ஆட்சி அமைக்கப்படும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அண்மையில் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்தது. கட்சியை ஸ்தாபித்த பண்டாரநாயக்க இது போன்ற சவால்களுக்கு முகம் கொடுத்து இறுதியில் உயிரிழந்தார்.
அதேபோன்று அதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவடைந்து கட்சித் தலைமையகம் கூட எம் கைவசம் இருக்கவில்லை. ஆனால், இன்று அவை அனைத்தையும் வெற்றிகரமாக முறியடித்து பலமான ஒரு கட்சியாக சு.க. உருவாகியுள்ளது என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்” – என்று அவர் மேலும் கூறினார்.
19இற்கு ஆதரவைப் பெற்றவுடனே
துரோகமிழைத்துவிட்டார் ரணில்
“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 19ஆவது திருத்தத்துக்கு எங்கள் ஆதரவைப் பெற்று இறுதியில் எங்களுக்குத் துரோகமிழைத்துவிட்டார்” என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிமல் சிறிபால டி சில்வா இந்த மாநாட்டில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரிலேயே தேசிய அரசில் இணைந்தோம். ஆனால், ஒரு கட்டத்தில் அவரே இது சாத்தியமில்லை என்று கருதினார். காரணம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் எவ்வகையிலும் ஒத்துப்போக முடியாது என்று ஜனாதிபதி முடிவெடுத்தார்.
பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 68ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. கட்சியை உருவாக்கிய பண்டாரநாயக்கவுக்கு குருநாகலில் இடம்பெற்ற கூட்டத்தின்போது கட்சிக்குள்ளேயே ஆபத்தை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டது. எனினும், அவர் அதற்கு இலக்காகவில்லை. அதில் பின்னடையாது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் கட்டியெழுப்புவதற்காக அவர் உழைத்தார். அதேபோன்று அவரைத் தொடர்ந்து ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவும் கட்சியைக் கட்டியெழுப்பினார்.
அவரால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாதுகாக்கப்பட்டதன் காரணமாகவே அவரைத் தொடர்ந்து சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும், மஹிந்த ராஜபக்சவுக்கும் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், எமக்கும் அரசியல் பயணத்தைத் தொடர்வதற்கான வாய்ப்புக் கிடைக்கப் பெற்றது. இதனை நாம் நினைவுகூர வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.

