3 நாட்கள் சபை அமர்வுக்கு ரூ.8 கோடி செலவு! எம்.பிக்களின் அடாவடியால் மக்கள் பணம் வீண்விரயம்!
இலங்கையின் நாடாளுமன்றமானது ஒருசில எம்.பிக்களின் அடாவடித்தனமான செயற்பாடுகளால் வன்முறைக்களமாக மாறியுள்ளது. அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களானவை, அனைத்துலக மட்டத்தில் எமது நாட்டுக்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றமே அதிஉயர்சபையாக கருதப்படுகின்றது. நாட்டை நிர்வகிப்பதற்குரிய சட்டங்கள் அங்கேயே இயற்றப்படுகின்றன. இதன்காரணமாகவே மக்களால் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகளுக்கு பல்வேறு சிறப்புரிமைகள் வழங்கப்படுகின்றன.
இலங்கையில் மாதம் 8 நாட்கள் சபைஅமர்வு இடம்பெறும். ஒரு நாள் சபை அமர்வை நடத்துவதற்கு 2 கோடியே 53 இலட்சம் ரூபா செலவாகின்றது என தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக கடந்த வருடத்தில் 95 சபை அமர்வுகள் நடாத்தப்பட்டுள்ளன. இதற்காக வேண்டி 245 கோடிக்கும் அதிகமான நிதி செலவு செய்யப்பட்டுள்ளது என்று பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
“ இவ்வாறு பெருந்தொகை பணம் செலவிடப்பட்டு நடத்தப்படும் சபை அமர்வை எம்.பிக்கள், போர்க்களமாக மாற்றுவது கவலைக்குரிய விடயமாகும்” என்று ஜனநாயக விரும்பிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த மூன்று பாராளுமன்ற அமர்வுகளுக்கும் சுமார் எட்டுக் கோடி ரூபா பொது மக்களின் பணத்தை செலவு செய்யப்பட்டுள்ளது. உரிய வகையில் எவ்வித முடிவும் காணப்படவில்லை. அரச சொத்துகளே சேதமாக்கப்பட்டன.
வாழ்க்கைச்செலவு அதிகரிப்பால் மக்கள் திண்டாடும் நிலையில், பாரியதொகை நிதி செலவுடன் ஆரம்பமாகும் சபை அமர்வை ஆரோக்கியமானதாக மாற்றியமைக்காதது மக்கள் பிரதிநிதிகளின் குறை அல்லவா?
