Local

2019 டிசம்பரில் தேர்தல் நடத்த ஐ.தே.க. தயார்! – கூட்டமைப்பிடம் ரணில் தெரிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தலை அடுத்த வருடம் டிசம்பர் மாதம் நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் முடியும் வரையில் நாடாளுமன்றத்தைக் கலைக்கக் கூடாது என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இதன்போது கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை அலரி மாளிகையில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பிலேயே பொதுத் தேர்தல் பற்றியும் பேசப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர், அடுத்த வருடம் ஜூலை மாதம் நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்துவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சு நடத்தியதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

“சட்டரீதியான அரசு அமைந்த பின்னர், அந்த அரசின் கீழேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை நாங்கள், சுதந்திரக் கட்சிக்கு எடுத்துரைத்துள்ளோம். நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளும் இணங்கினால் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடத்த நாங்கள் தயார் என்பதையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சுட்டிக்காட்டியுள்ளோம்” என்று கூட்டமைப்பிடம் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசமைப்பு, காணி விவகாரம், ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களை செய்து முடிப்பதற்கு தற்போதைய நாடாளுமன்றம் அதன் ஆயுள் காலம் முடியும் வரையில் கலைக்கப்படக் கூடாது என்று ஐ.தே.கவின் தலைவர் ரணிலிடம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading