Lead NewsLocalNorth

கடந்த ஆட்சியாளர்களுக்கு வாக்களித்தால் காட்டு யுகம்! – வவுனியாவில் வைத்து ரணில் இப்படி முழக்கம்

“கடந்த ஆட்சியாளர்களுக்கு வாக்களித்தால் அது காட்டு யுகத்துக்கே மக்களை மீண்டும் கொண்டுசென்று விடும்.”

– இவ்வாறு தெரிவித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

வவுனியா வைத்தியசாலையில் சுகாதார அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் மாகாண சபையால் முன்னெடுக்கப்பட்டிருந்த விபத்துக்கள் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவைத் திறந்து வைக்கும் நிகழ்விலும் நெதர்லாந்து அரசின் நிதி உதவியோடு அமைக்கப்படவுள்ள இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் நேற்றுக் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கடந்த அரசு தார் வீதிகளையும் பட்டுப்பாதை வீதிகளையும் அமைத்திருந்ததே தவிர மக்களுக்குக்கான பொருளாதார ரீதியான அபிவிருத்தியை ஏற்படுத்தவில்லை. நாம் வடபகுதி மக்களுடையதும் நாட்டு மக்களுடையதுமான பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தும் திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். நாம் வன்னிப் பிரதேசத்தை இரண்டாம் தரமாகப் பார்ப்பதில்லை. யாழ்ப்பாணப் பிரதேசத்திற்கு எவ்வாறான அபிவிருத்யை ஏற்படுத்துகின்றோமோ அதேபோன்று வன்னி பிரதேசத்திலும் அபிவிருத்தியை மேற்கொண்டு வருகிறோம்.

வவுனியாவைப் பொறுத்தவரை பொருளாதார மத்திய நிலையம், செட்டிக்குளத்தில் நீர் விநியோகத் திட்டம், வீட்டுத்திட்டங்கள், சுகாதார வசதி மேம்படுத்தல், ஐ றோட் போன்ற திட்டங்கள் இந்த அரசின் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டன.

நாம் எதிர்வரும் காலங்களில் வன்னி பிரதேசத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குகின்ற வேலைத்திட்டத்தினை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இந்த வேலைத்திட்டமானது தொழிற்சாலைகளை மாத்திரம் அமைத்து வேலைகளை வழங்குவதாக இருத்தல் கூடாது. தென்பகுதி மக்களுடைய நெல் மற்றும் பல்வேறு உணவு பொருள்கள் வடபகுதியில் இருந்தே வருகின்றன. ஆகவே, இந்த உற்பத்தியை நவீன தொழில் நுட்பத்தின் ஊடாக எவ்வாறு உயர்த்த முடியும் என்பது தொடர்பில் சிந்தித்து திட்டங்களை உருவாக்க வேண்டும்.

எனவே, இவ்வாறான திட்டங்களை முன்னெடுப்பதற்கு மக்கள் சரியான தீர்மானங்களையும் எடுக்க வேண்டும். மீண்டும் எமக்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றபோதே இவற்றை செயற்படுத்த முடியும்.

இதேவேளை, நெதர்லாந்து அரசிடம் இருந்து நிதியை பெறுவதற்கு முனைப்புடன் செயற்பட்ட முன்னாள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்துக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading