தமிழருக்கு இவ்வாண்டுக்குள் அரசியல் தீர்வு!
தமிழ் மக்களுக்கு நீடித்து நிலைக்ககூடிய கௌரவமானதொரு அரசியல் தீர்வு இவ்வாண்டுக்குள் வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மேல்மாகாணசபை உறுப்பினருமான சி.வை.பி. ராம் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
இலங்கையில் 71 ஆவது சுதந்திர தினம் தேசிய நாளாக கொண்டாடப்பட்டது. வெள்ளையர்களின் காலனித்துவ ஆட்சியிலிருந்து நாம் விடுதலைப்பெற்றாலும், நாடு இன்னும் முழுமையாக சுதந்திரமடையவில்லை என்றே கூறவேண்டும்.
அன்று நாட்டின் விடுதலைக்காக தமிழ், சிங்களம், முஸ்லிம் என அனைத்து இன மக்களும் ஓரணியில் திரண்டு போராடினார்கள். ஆனால், இன்று வெவ்வேறாக பிரிந்து நிற்கின்றோம். ஒரு சில இனவாத மற்றும் மதவாத குழுக்கள் எம்மை பிரித்தாள்கின்றன.
இந்நிலைமைமாறவேண்டும். நாம் அனைவரும் இலங்கையர் என்ற உணர்வு எம் உள்ளங்களில் மலரவேண்டும். அப்போதுதான் சுதந்திரதினத்தை எம்மால் சுதந்திரமாக கொண்டாடக்கூடியதாக இருக்கும்.
அதேவேளை, ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறங்கிவந்துள்ளது. இது வரவேற்கப்படக்கூடிய விடயமாகும்.
இது அக்கட்சியின் பலவீனம் என கருதி தென்னிலங்கை கட்சிகள் பெருமைபடக்கூடாது. புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்குரிய ஒரு சிறந்த சந்தர்ப்பமாக இதை கருதவேண்டும்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களின்போது உறுதிமொழி வழங்கப்பட்டது. இதை ஆதரித்து மக்கள் வாக்களித்திருந்தனர். எனவே, குறித்த உறுதிமொழி நிறைவேற்றப்படவேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால், தமிழ் மக்கள் மாற்றுவழியை தேடவேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவார்கள். அவர்களை ஆட்சியாளர்களே இந்நிலைமைக்கு அழைத்துக்செல்லக்கூடாது.
எனவே, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அரசியல் தீர்வு முன்வைக்கப்படவேண்டும். அதை மையப்படுத்தியமாக புதிய அரசியலமைப்பு அமையவேண்டும்.
அதுவும் இவ்வாண்டுக்குள் அது நிறைவேற்றப்படவேண்டும். அப்போதுதான் இலங்கையர் என்ற உணர்வு தமிழ் மக்கள் மனங்களிலும் ஏற்படும்.’’ என்றார்.
