Lead NewsLocal

சி.ஐ.டி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த பூஜிதவுக்கும் ஹேமசிறிக்கும் ஒரே நாளில் திடீர் சுகயீனம்!! – வைத்தியசாலையில் சேர்ப்பு

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் திடீர் சுகயீனம் காரணமாக இன்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தினமன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு இன்று காலை 10 மணிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இருவருக்கும் இவ்வாறு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.

ஹேமசிறி பெர்னாண்டோ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சிகிச்சைப் பிரிவிலும், பூஜித ஜயசுந்தர நாரஹேன்பிட்டியவிலுள்ள பொலிஸ் வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், “நான் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால் எதிர்வரும் 8ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாவேன்” என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பொலிஸ்மா அதிபர் தரப்பிலிருந்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

உயிர்த்த ஞாயிறு தினமன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டு தொடர்பாக இவர்கள் இருவரையும் கைதுசெய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவுக்கு சட்டமா அதிபர் தப்புல டீ. லி​வேரா நேற்று அனுப்பிய கடிதம் ஒன்றிலேயே இது தொடர்பான அறிவுறுத்தலை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading