Lead NewsLocal

கோட்டாவின் கருத்து தவறு! – ராஜபக்ச குடும்பத்துக்குள் வலுக்கின்றது அதிகார மோதல்

“ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை. இது தொடர்பில் இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இணைந்து தீர்க்கமான முடிவெடுப்பார்கள்.”

– இவ்வாறு முன்னாள் பொருளாதார அமைச்சரும் ராஜபக்ச குடும்ப உறுப்பினருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

“எல்லோருக்கும் பதவி ஆசை வந்துள்ளது. இனிவரும் நாட்களில் இது அம்பலத்துக்கு வரும்.

இந்நாள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் முரண்பாடுகள் எதுவும் வராமல் தீர்மானம் எடுப்பார்கள்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

‘விரைவில் எனது அமெரிக்கக் குடியுரிமை நீக்கப்படும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தரப்பில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட நான் தயாராகிவிட்டேன்’ என்று முன்னாள் பாதுகாப்புச் செயலரும் ராஜபக்ச குடும்ப உறுப்பினருமான கோட்டாபய ராஜபக்ச மீண்டும் சிங்கள ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வினவியபோதே பஸில் ராஜபக்ச மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இன்னமும் அறிவிப்பு வரவில்லை.

அதற்கிடையில் அரச தரப்புக்குள்ளும் எதிர்த்தரப்புக்குள்ளும் வேட்பாளர் தெரிவு தொடர்பில் முரண்பட்ட கருத்துக்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒற்றுமையைக் கருத்தில்கொண்டு – வெற்றிவாய்ப்பை உறுதிப்படுத்தி மக்கள் மனதை வென்றவரே ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்யப்படுவார்.

குறித்த வேட்பாளர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவார் அல்லது அந்தக் கட்சியின் அனுமதியுடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவார்” – என்றார்.

கோட்டாபய ராஜபக்ச தெரிவித்த கருத்து தவறு என்று மஹிந்த ராஜபக்சவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading