Lead NewsLocal

பிரபாகரனின் நிழலைக்கூடக் காணாதவர்கள் இப்போதெல்லாம் அதிகமாகப் பேசுகிறார்கள்! – வரலாற்றை எழுதுவேன் என்கிறார் மாவை எம்.பி.

“தம்பி பிரபாகரனின் நிழலைக்கூடத் தரிசிக்காதவர்களெல்லாம் இப்போது அதிகமாகப் பேசுகிறார்கள்” என்று தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, “என்னால் வரலாற்றை எழுத முடியும்” என்றும் குறிப்பிட்டார்.

வலிகாமம் மேற்குப் பிரதேச சபை மண்டபத்தில் நேற்று நடைபெற்ற அமரர் அமிர்தலிங்கத்தின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தின் போராட்ட வரலாற்றைக் கூறிய மாவை சேனாதிராஜா, அவருடன் சேர்ந்து இயங்கிய சம்பவங்களையும் பதிவு செய்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“அமிர்தலிங்கம் இந்தியாவில் இருந்தபோது அனுப்பிய கடிதம் ஒன்று தவறாக மொழிபெயர்க்கப்பட்டதால் சிறை செல்ல நேரிட்டது. அது தொடர்பில் மயிலிட்டித் துறைமுகத்துக்கான நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதியிடமும் நான் தெரிவித்தேன். அமீரண்ணன் தம்பியைச் (பிரபாகரன்) சந்தித்தார் என்பது அவர் எவ்வளவு தூரம் அவர்களை நேசித்தார் என்பதையும், அவர்களை ஊக்கப்படுத்தினார் என்பதையும் அறியமுடியும்.

அவர் இந்தியாவில் இருக்கும்போதும் அவர்களை ஊக்கப்படுத்தினார். ஆனால், காலம் தவறாகக் கையாளப்பட்டிருக்கின்றது. அல்லது இன்றுவரையும் அவர் இந்த இயக்கத்தைக் கொண்டு நடத்தியிருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இருந்திருக்கும். பலருக்கு அது தெரியாது; எனக்குத் தெரியும்.

என்னால் வரலாற்றை எழுத முடியும். எல்லாவற்றையும் எழுதுவது கடினமாக இருக்கின்றது. அந்த வரலாற்றை வலியுறுத்தி சொல்லச் சொல்கின்றார்கள் நான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன்.

விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் நாங்கள் எப்படி இயங்கினோம் என்பதை நான் இப்போது சொல்லப்போனால் நாடு தாங்கிக்கொள்ளுமோ தெரியாது. ஆனால், சொல்லித்தான் ஆகவேண்டும்.

நான் சென்ற மாதத்திலே பழநெடுமாறனைச் சந்தித்தபோது, அவரும் அந்த விடயங்களை எழுதித்தான் ஆகவேண்டும் என்று வற்புறுத்தினார். ஆனபடியால் வரலாறுகளைத் திரித்து மறந்து குற்றஞ்சுமத்தி, பிரபாகரனுடைய நிழலைக்கூடத் தரிசிக்காதவர்கள், தெரியாதவர்கள், காணாதவர்கள் எல்லாம் இப்போது அதிகமாகப் பேசுகின்றார்கள்.

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் பற்றி அறிந்திருந்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மௌனமாக இருந்தார். இனக் குரோதங்களால் அன்று தொடக்கம் இன்றுவரை குருதி சிந்தியே பயணிக்க வேண்டியுள்ளது” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading