Lead NewsLocalNorth

ஜனாதிபதித் தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத முடிவையும் எடுப்போம்! – தமிழ்க் கூட்டமைப்பு அதிரடி

“ஜனாதிபதித் தேர்தலில் எவரும் எதிர்பாராத தீர்மானத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கக்கூடும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வடமராட்சி, கெருடாவில் நற்பணி மன்றத்தின் ஆறாவது ஆண்டு நிறைவு விழாவும் கெளரவிப்பு நிகழ்வும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாஸவின் மகன் சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பிலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பிலும், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ‘தேசிய மக்கள் சக்தி’ கூட்டணியின் சார்பிலும் வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ளார்கள்.

இந்தப் பிரதான மூன்று கட்சிகளின் வேட்பாளர்களுடனும் அந்தக் கட்சிகளின் தலைமைகளுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்தனியாகப் பேச்சு நடத்தத் தயாராக இருக்கின்றது. அதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களின் கருத்துக்களையும் கேட்டறிவோம்.

இந்தப் பேச்சுக்கள் மற்றும் சந்திப்புக்களின் பிரகாரம் எந்த வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நாம் எடுப்போம். அவசரப்பட்டு தீர்மானம் எடுக்கமாட்டோம். அதேவேளை, எவரும் எதிர்பாராத தீர்மானத்தையும் நாம் எடுக்கக்கூடும்” – என்றார்.

கெருடாவில் நற்பணி மன்ற மண்டபத்தில் நற்பணி மன்றத் தலைவர் வெ.பிறேமதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.சுகிர்தன், பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் அ.சா.அரியகுமார் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading