Local

சுதந்திரமான, நியாயமான, அமைதியான தேர்தல் நடைபெற ஒத்துழைப்பு வழங்குக! – அநாகரிக அரசியல் கலாசாரம் மீண்டும் வேண்டாம் என்று மக்களிடம் ரணில் வலியுறுத்து

“நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரமானதும் நியாயமானதும் அமைதியானதுமான ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கும், கடந்த காலத்தில் நிலவிய அநாகரிகமான அரசியல் கலாசாரம் மீண்டும் கட்டியெழுப்பப்படாமல் இருப்பதற்கும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.”

– இவ்வாறு கேட்டுள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட விசேட அறிக்கையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்து நாடு முழுவதும் ஜனநாயகத் தன்மையுடையதும், நியாயாதிக்கத்துக்குட்பட்டதுமான அமைதியான சூழலொன்றை உருவாக்க நாம் நடவடிக்கை எடுத்தோம்.

அத்தகைய ஜனநாயக , நியாயாதிக்க சூழலில் இடம்பெறுகின்ற முதலாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆயத்தங்கள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் சுயாதீன ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கு அவசியமான பாதுகாப்பு செயற்பாடுகளுக்காகப் பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் சுதந்திரமானதும் நியாயமானதும் அமைதியானதுமான தேர்தல் ஒன்று நடைபெறுவதற்கு உரிய நிறுவனங்களுக்கும் அதிகாரிகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதே இந்த நாட்டின் பிரஜை என்ற வகையில் எம் அனைவரினதும் கடமையாகும்.

தற்போது நாம் இத்தகைய சுதந்திரமான சூழ்நிலையை மேலும் வலுப்படுத்த வேண்டும். மீண்டும் கடந்த காலத்தில் நிலவிய அநாகரிகமான அரசியல் கலாசாரம் கட்டியெழுப்பப்படாமல் இருப்பதற்கு எம்மால் இயலுமான அளவுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.

எனவே, அனைவரும் நாளை வாக்களிப்பதுடன், இந்த ஜனாதிபதித் தேர்தல் சுதந்திரமானதும் நியாயமானதும் அமைதியானதுமான முறையில் நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோன்று ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாத்து அமைதியான முறையில் செயற்படுமாறும் அனைவரிடமும் குறிப்பாகக் கேட்டுக்கொள்கின்றேன்” – என்றுள்ளது.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading