பழைய முறையில் மாகாணத் தேர்தல்: தனிநபர் சட்ட வரைவு நாடாளுமன்றில்
மாகாண சபைத் தேர்தலைப் பழைய தேர்தல் முறைமையில் நடத்த வேண்டும் என்ற தனிநபர் சட்ட வரைபு ஒன்றைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளார்.
மாகாண சபைகளின் ஆயுள்காலம் முடிந்துள்ள போதும் அவற்றுக்கான தேர்தல்களை நடத்தப்படவில்லை. சட்ட நெருக்கடிகள் காரணமாகவே தேர்தலை நடந்தத முடியாதுள்ளது என்று கூறப்படுகின்றது.
மாகாண சபைத் தேர்தல் முறைமை தொகுதி மற்றும் விகிதாசாரம் கலந்த முறைமைக்கு 2017ஆம் ஆண்டு மாற்றப்பட்டிருந்தது. புதிய முறைமையில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின் தொகுதிகள் பிரிக்கப்பட்டு எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட வேண்டும். அது தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்திருந்தபோதும் அது நாடாளுமன்றில் நிறைவேற்றப்படவில்லை. அதன்பின்னர் எல்லை நிர்ணயம் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் பழைய மற்றும் புதிய முறைமைகளில் தேர்தலை நடத்த முடியாத நிலமை உள்ளது.
அதையடுத்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனிநபர் சட்ட வரைபை நாடாளுமன்றில் சமர்பித்துள்ளார். பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்டத் திருத்த வரைபே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தனிநபர் சட்ட வரைபு இந்த வாரம் நடைபெறும் நாடாளுமன்ற அமர்வுகளில் எடுத்துக் கொள்ளப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்றும், அடுத்த மாத ஆரம்பத்தில் நடக்கும் நாடாளுமன்ற அமர்வுகளின்போது எடுத்துக் கொள்ளப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, பழைய தேர்தல் முறைமையில் மாகாணத் தேர்தல்களைத் தற்போது நடத்த முடியுமான என்ற கருதுகோள் ஆணை ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பாகச் சட்டமா அதிபரால் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பாக நாளைமறுதினம் உயர் நீதிமன்றம் ஆராயவுள்ளது.

