FeaturesLead NewsLocalNorth

கொட்டித் தீர்த்த மழையால் வெள்ளக்காடாகியது வடக்கு! – 45,000 பேர் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்த அடைமழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வடக்கின் 5 மாவட்டங்களிலும் 13 ஆயிரத்து 466 குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்து 959 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் 400 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் அனைத்துக் குளங்களும் நீரால் நிரம்பியுள்ளன. இதையடுத்து குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் இரணுவத்தினரும் இளைஞர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.

கிளிநொச்சி

இரணைமடுக்குளத்தின் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. கனகாம்பிக்கைக்குளம், கல்மடு, விசுவமடுக் குளங்களில் இருந்து அதிக நீர் வெளியேறுகின்றது.

குளங்களில் இருந்து அதிக நீர் வெளியேறுவதால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. புன்னைநீராவி, தர்மபுரம், கண்டாவளை, பன்னங்கண்டி ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் முற்றாக மூழ்கியுள்ளன.

இதுவரை 9 ஆயிரத்து 475 குடும்பங்களைச் சேர்ந்த 31 ஆயிரத்து 234 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் 26 இடைத்தங்கல் முகாம்களிலும், உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் முத்தையன்குளம், வவுனிக்குளம், உடையார்கட்டுக் குளம் ஆகிய குளங்களின் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அந்தக் குளங்களின் கலிங்கு ஊடாக அதிக நீர் வெளியேறுகின்றது.

அங்குள்ள தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வீதிகளின் போக்குவரத்துகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 794 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 651 பேர் பாதிப்படைந்துள்ளனர். இடம்பெயர்ந்தவர்கள் 25 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றனர் என்று முல்லைத்தீவு மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மன்னார்

மன்னார் மாவட்டத்தில் கரிசல் பிரதேசத்தில் வெள்ளத்தால் 27 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் மீனவர்களின் 11 படகுகள் சேதமடைந்துள்ளன என்று மன்னார் மாவட்ட செயலர் மோகன்ராஜ் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் கடும் மழை பெய்துள்ள நிலையில் மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – போக்கறுப்பு வீதியூடான போக்குவரத்து மருதங்கேணியுடன் துண்டிக்கப்பட்டுள்ளது. மருதங்கேணில் இருந்து போக்குறுப்புக்கான 30 கிலோமீற்றர் தூர வீதியால் பயணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. மருதங்கேணியில் வெள்ளத்தால் 273 குடும்பங்களைச் சேர்ந்த 708 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று மாவட்ட செயலர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வவுனியா

வவுனியா மாவட்டத்தில் 77 குடும்பங்களைச் சேர்ந்த 281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் மழைவீழ்ச்சி குறைவாகப் பதிவாகியுள்ளது.

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading