Lead NewsLocal

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் மைத்திரியின் யோசனைக்கு ரணில், மஹிந்த முழு ஆதரவு! – உடன் பேச்சு நடத்தவும் வலியுறுத்து

நிறைவேற்று ஜனாதிபதி முறைமைய ஒழிக்கவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் வைத்து முன்வைத்த யோசனைக்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் முழுமையான ஆதரவை வழங்கியுள்ளனர். இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாகப் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார். நாடாளுமன்றமே அதனைச் செய்யவேண்டும் என்றும், அவர்கள் அதனைச் செய்யவில்லை என்றும் குற்றம் சுமத்தியிருந்தார்.

ஜனாதிபதியின் யோசனையுடன் முழுமையாக உடன்படுவதாகப் பிரதமர் ரணிலும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவும் தெரிவித்துள்ளனர்.

“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க எந்த வேளையிலும் நாம் தயாராக இருக்கின்றோம். ஜனாதிபதி மைத்திரி இது தொடர்பில் எம்முடன் பேச்சு நடத்தவில்லை. இது தொடர்பில் அவர் திறந்த மனதுடன் எம்முடன் பேச்சு நடத்தினால் முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருக்கின்றோம். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க நாங்கள் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும். அதில் நாங்களும் உறுதியாக இருக்கின்றோம். தற்போதைய நிலமையில் அதை ஒழிப்பது, வெற்றியளிக்குமா? இல்லையா? என்பதை இப்போதைக்கு எம்மால் சொல்ல முடியாது. இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபாலதான் அனைத்துத் தரப்புகளுடனும் பேச்சு நடத்தி முடிவுக்கு வரவேண்டும். ஆனால், எமது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்தே தீருவோம்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading