Local

ரணில் – மோடி பேச்சுக்களில் முக்கிய விடயங்கள் ஆராய்வு!

புதுடில்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். ஹைதராபாத் ஹவுசில் நேற்றுப் பிற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, இருதரப்பு உறவுகள் மற்றும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியில் நெருக்கமான உறவுகளை வலுப்படுத்தும் வழிகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின் பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிராந்திய மற்றும் பூகோள விவகாரங்கள் தொடர்பாகவும், இரண்டு நாடுகளின் தலைவர்களும், கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர் என்று கூறப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு இலங்கைக்கு மோடி மேற்கொண்ட பயணத்தின் போதும், அண்மைய உயர்மட்ட சந்திப்புகளின் போதும், எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாகவும், இதன் போது மீளாய்வு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும், இந்திய – இலங்கை பிரதமர்களின் இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுக்களின் போது, மத்தல விமான நிலையத்தை இந்தியா பொறுப்பேற்றுக் கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது எனக் கூறப்படுகின்றது.

அதேவேளை, “இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பு மகிழ்ச்சியளிக்கின்றது. நாங்கள் பயனுள்ள கலந்துரையாடலில் ஈடுபட்டோம். இந்திய – இலங்கை ஒத்துழைப்பு குறித்த பல்வேறு காரணிகள் தொடர்பாக மீளாய்வு செய்தோம்” என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ருவிட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது குழுவினருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மதிய போசன விருந்துபசாரத்தையும் வழங்கினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading