EastFeaturesLead NewsLocal

அபிவிருத்திக்காக உரிமையை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை! – திருமலையில் ரணில் முன் சம்பந்தன் இடித்துரைப்பு

“அபிவிருத்திக்காக எமது உரிமையை விட்டுக்கொடுக்க நாம் ஒருபோதும் தயாரில்லை. எப்போதும் உரிமைக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும். தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.”

– இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பாடசாலைகளில் தொண்டர் அடிப்படையில் சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று திருகோணமலையில் நடைபெற்றது. திருகோணமலை இந்துக் கலாசார மண்டபத்தில் தேசிய கொள்கைகள், பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம், மறுவாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சித் திறன் மற்றும் இளைஞர் விவகார அமைச்சரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இதுவரை தொண்டர் ஆசிரியர்களாகக் கடமையாற்றிவந்த உங்களுக்கு நிரந்தர நியமனம் கிடைப்பதையிட்டு நாம் மிகவும் சந்தோசமடைகின்றோம். அதேவேளை, நீங்களும் சிறந்த ஆசிரியர்களாக முறையாகக் கடமையாற்றக்கூடிய நிலைமையை அடையவேண்டும். அதற்குரிய பயிற்சித் திட்டங்களை அரசு வழங்கவேண்டும்.

தற்போதைய அரசின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். ஆனால், அபிவிருத்திக்காக எமது உரிமையை விட்டுக்கொடுக்க நாம் ஒருபோதும் தயாரில்லை. எப்போதும் உரிமைக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும். அது மதிக்கப்பட வேண்டும். அதன் அடைப்படையில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். அத்துடன், தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்” – என்றார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள 739 தொண்டர் ஆசிரியர்களுக்கும், வடக்கு மாகாணத்திலுள்ள 380 தொண்டர் ஆசிரியர்களுக்கும் என மொத்தமாக ஆயிரத்து 119 தொண்டர் ஆசிரியர்களுக்கும் நேற்று நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, தர்மலிங்கம் சிதார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், க.துரைரெட்ணசிங்கம், அப்துல் மஹ்ரூப், இம்ரான் மஹ்ரூப், எம்.எஸ்.தௌபீக் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள், மதகுருமார்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

திருகோணமலையில் இடம்பெயர்ந்த 600 குடும்பங்களுக்கான வீட்டு உறுதிப்பத்திரங்களும் இதன்போது வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வின் பின்னர் வீடுகள் கையளிப்பு, புதிய வீதி திறப்பு மற்றும் மக்கள் சந்திப்பு ஆகிய நிகழ்வுகளிலும் பிரதமர் ரணில் மற்றும் இரா.சம்பந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading