Lead NewsLocal

ஐ.எஸ்.ஐ.எஸ். தற்கொலைக் குண்டுதாரிகளுடன் ரிஷாத், முஜிபுர், அஸாத், ஹிஸ்புல்லா நேரடித் தொடர்புண்டு! – பதவிகளைப் பறித்து கைதுசெய்யுங்கள் என்று மைத்திரி, ரணிலிடம் மஹிந்த அணி வலியுறுத்து

“ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் வழிநடத்தலில் தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் மௌலவி சஹ்ரான் ஹாசீம் தலைமையிலேயே கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல்களின் தலைவர் சஹ்ரான் ஹாசீம் மற்றும் அவருடன் சாவடைந்த மேலும் இரண்டு தற்கொலைக் குண்டுதாரிகள் ஆகியோருடனும், சம்பவங்களின் பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ள தற்கொலைக் குண்டுதாரிகளின் உறவுகளுடனும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் நேரடித் தொடப்புகளை வைத்திருந்துள்ளனர். தேசிய புலனாய்வுத் தகவல்களும் இதனைத் தற்போது உறுதிப்படுத்தியுள்ளன. இவர்களுக்குத் தெரியாமல் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை. எனவே, இவர்கள் நால்வரினதும் பதவிகளைப் பறித்து இவர்களை உடன் அரசு கைதுசெய்ய வேண்டும்.”

– இவ்வாறு வலியுறுத்தியுள்ளது மஹிந்த அணி.

இது தொடர்பில் மஹிந்த அணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஊடகம் ஒன்றிடம் தெரிவித்ததாவது:-

“தௌஹீத் ஜமா அத் அமைப்பின் மத வெறியால் – கொடூரத் தாக்குதல்களினால் முஸ்லிம் சமூகமே இன்று வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் சிலர் பிரபல வர்த்தர்கர்கள் என்ற போர்வையில் நாட்டை நாசமாக்கியுள்ளார்கள். அப்பாவிக் கிறிஸ்தவ மக்களைக் கொன்றழித்துள்ளார்கள். இந்த நாசகார வேலைகளுக்குத் துணைபோனவர்களுக்கு ஒருபோதும் மன்னிப்பு வழங்கக்கூடாது.

தௌஹீத் ஜமா அத் அமைப்பினருடனும் அவர்களின் மதவெறித் தாக்குதல்களுக்குத் துணைபோனவர்களுடனும் நேரடித் தொடர்புகளை வைத்திருந்த ரிஷாத் பதியுதீன், முஜிபுர் ரஹ்மான், அஸாத் ஸாலி, ஹிஸ்புல்லா ஆகிய நான்கு அரசியல்வாதிகளையும் உடன் கைதுசெய்வதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதியும், பிரதமரும் எடுக்கவேண்டும். இல்லையெனில், ஜனாதிபதியும், பிரதமருமே இதற்குப் பொறுப்புக்கூற வேண்டிவரும்.

மஹிந்த ஆட்சியில் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டது. இது அனைவருக்கும் தெரிந்த விடயம். 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர்தான் நாட்டுக்குள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரின் ஊடுருவல் இடம்பெற்றுள்ளதுடன் தௌஹீத் ஜமா அத் அமைப்பின் அடாவடியும் தலைவிரித்தாடியுள்ளது. இது குறித்து ஜனாதிபதியும், பிரதமரும் மௌனத்தைக் கலைத்து உண்மை நிலைவரத்தை நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

தாக்குதல்கள் தொடர்பில் தேசிய புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தும் பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்தமை எமக்குப் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொறுப்பானவர்கள் இதற்குப் பதில் கூறியே ஆகவேண்டும்” – என்றார்.

இதேவேளை, தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நேற்று சபையில் உரையாற்றும்போது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading