EastLead NewsLocal

கோட்டாவின் சர்வாதிகாரத்துக்கு முடிவுகட்ட சஜித்தான் ஒரே தெரிவு! – தனி ஈழத்தைத் தவிர எல்லாவற்றையும் கேட்டோம் என்று சம்பந்தன் தெரிவிப்பு

“இலங்கையில் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் வரை மஹிந்த – கோட்டாபய தலைமையில் சர்வாதிகார ஆட்சியே தலைவிரித்தாடியது. எனவே, இந்தச் சர்வாதிகார ஆட்சி மீண்டும் நமக்குத் தேவையில்லை. இதற்கு முடிவுகட்ட சஜித் பிரேமதாஸதான் ஒரே தெரிவு. தனி ஈழத்தைத் தவிர ஏனைய எல்லாவற்றையும் அவரிடம் கேட்டுள்ளோம். எனவே, எதிர்வரும் 16ஆம் திகதி சஜித்தின் ‘அன்னம்’ சின்னத்துக்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.”

– இவ்வாறு கோரிக்கை விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

‘அன்னம்’ சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து மட்டக்களப்பு, கல்லடி – உப்போடை துளசி மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“2005ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்ததன் விளைவாக மஹிந்த சுமார் ஒன்றரை இலட்சம் வாக்குகளால் வெற்றி பெற்றார். தமிழ் மக்கள் வாக்களித்திருந்தால் அவர் அன்று வெற்றி பெற்றிருக்கமாட்டார்.

2005ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை எமது மக்கள் பட்ட துயரங்கள் உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பின் மூலமே அந்த நிலைமை ஏற்பட்டது. அவ்விதமான நிலைமை மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது.

எமது ஜனநாயக முறையைப் பயன்படுத்தி அர்த்தபுஷ்டியுடன் எமது இலக்கை அடையக்கூடிய விதத்திலே புதிதாகத் தெரிவு செய்யப்படுகின்ற ஜனாதிபதி பக்குவமானவராக, துவேசத்தின் அடிப்படையில் சிந்திக்காதவராக, எமக்கு உதவ வேண்டியவராக இருக்க வேண்டும். அதுதான் 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் எமக்கு உணர்த்திய பாடம்.

2015இல் அரசியல் சாசனத்தை மாற்றி கட்டுப்பாடின்றி மூன்றாவது முறை மஹிந்த போட்டியிட்டார். அமெரிக்காவில்கூட ஒருவர் இரு முறைதான் இருக்க முடியும். அவ்விடயத்தை தனது சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி உயர்நீதிமன்றத்தை தனது கைக்குள் வைத்துக் கொண்டு சர்வாதிகார ஆட்சியைத் தொடர்வதற்காக மூன்றாவது முறையாகப் போட்டியிட்டார். தமிழ் மக்கள் அதை விரும்பவில்லை. அவர் தோல்வியடைந்தார்.

மைத்திரிபால சிறிசேன நான்கரை இலட்சம் வாக்குகளால் வெற்றி பெற்றார். மைத்திரிபால சிறிசேனவுக்கு வடக்கு, கிழக்கில் விழுந்த வாக்குகள் சுமார் ஆறரை இலட்சத்து ஐம்பதாயிரம். தமிழ் மக்கள் அவருக்குப் பெருவாரியாக வாக்களிக்காதிருந்தால் அவரால் வென்றிருக்க முடியாது. இதனை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தத் தேர்தலிலும் சிங்களப் பிரதேசங்களில் போட்டி மிகவும் கடுமையாக இருக்கின்றது. எதிர்வரும் தேர்தல் முடிவு தமிழ் மக்களின் வாக்கில்தான் தங்கியிருக்கின்றது என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது. எனவே, நாங்கள் தெளிவாக முடிவெடுத்துச் செயற்பட வேண்டும்.

கோட்டாபய பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது அவர் எவ்வாறு செயற்பட்டவர் என்று அனைவருக்கும் தெரியும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் நடராஜா ரவிராஜ் ஆகியோரைச் சுட்டுப் படுகொலை செய்தது யார்? இதுவரை எந்தப் பதிலும் இல்லை.

பிள்ளையான் போன்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்கான காரணம் என்ன? அதன் நோக்கம் தமிழ் மக்களை அடிமைகளாக வைத்திருப்பதும் அடக்குவதுமே. இவ்வாறான சிந்தனை கொண்டு செயலாற்றுகின்றவர்களை நாங்கள் ஆதரிக்க முடியுமா?

மாணவர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள், சாதாரண பொதுமக்கள் எனப் பலர் ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்டார்கள்.

அந்தப் பத்து 10 வருட தமிழ் மக்கள் மீது வன்முறையே கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. மக்கள் ஆட்சி இன்றி முழுமையான அட்டூழியம் நடத்தி மக்களைத் துன்பப்படுத்தினார்கள்.

13ஆவது அரசமைப்பு திருத்தத்தை மாற்றி அதிகாரத்தைக் குறைப்பதற்கு முயற்சித்தார்கள். எமது செயற்பாடுகளால் அது தடுக்கப்பட்டது. இவ்விதமான ஒருவர் நமக்கு முறையான அரசில் தீர்வைத் தருவாரா?

அதியுச்ச அதிகாரப் பங்கீட்டுடன் நான் அரசியல் தீர்வைத் தருவேன் என்று கோட்டாபயவின் தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கின்றாரா? அரசியல் தீர்வு சம்பந்தமாக எதையும் சொல்லியிருக்கின்றாரா? இல்லை. அவ்வாறான ஒருவருக்கு நாங்கள் எவ்வாறு வாக்களிக்க முடியும்?

சஜித் பிரேமதாஸ பற்றி நமக்கு நன்றாகத் தெரியும். அவர் ஒரு துவேசவாதியல்ல. அவரது தந்தையும் ஒரு துவேசவாதியல்ல. ஓர் இனவாதியல்ல.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் சஜித் பிரேமதாஸவை நான் சந்தித்தேன். அப்போது, ‘நீங்கள் என்னவிதமான அரசியல் தீர்வை எதிர்பார்க்கின்றீர்கள்?’ என்று என்னிடம் அவர் கேட்டார். நான் சொன்னேன் தங்கள் தந்தை, “என்னால் ஈழம் தர முடியாது. ஆனால், ஈழத்தைவிட எல்லாம் தருவேன் என்று அன்று சொன்னார். அதேபோன்று இன்று நாங்கள் தனி ஈழத்தைக் கேட்கவில்லை. ஏனைய எல்லாவற்றையும் கேட்கின்றோம் என்று அவரிடம் கூறினேன்.

அதியுச்ச அதிகாரப் பங்கீட்டைக் கேட்கின்றோம், எமது மக்கள் தங்கள் சொந்தப் பிரதேசங்களில் தாங்களின் தீர்மானத்தை நிறைவேற்ற அமுல்படுத்தக் கூடிய நிலைமை இருக்க வேண்டும், கல்வி, உயர்கல்வி, சுகாதாரம், காணி, பாதுகாப்பு, பொலிஸ் அதிகாரம், விவசாயம் நீர்ப்பாசனம், கைத்தொழில், கடற்தொழில், கால்நடை போன்ற மக்கள் வாழ்வோடு சம்பந்தப்பட்ட விடயங்களின் அதிகாரம் பங்கீடு செய்யப்பட்டு. எமது மக்களினால் ஜனநாய ரீதியாகத் தெரிவு செய்யப்படும் தலைவர்களினால் அந்த விடயங்கள் சம்மந்தமாக சட்டத்தை ஆக்குகின்ற, நிர்வகிக்கின்ற அதிகாரங்களைப் பயன்படுத்தி உறுதியான வகையில், நீடித்து நிலைத்திருக்கக்கூடிய வகையில் அந்த அதிகாரப் பங்கீடு இருக்க வேண்டும். அதுதான் எமது நிலைப்பாடு.

அந்தப் பயணத்தை நோக்கி நாங்கள் நியாயமான தூரம் பயணித்து விட்டோம். 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் குழப்பம் ஏற்பட்டிருக்காவிட்டால் எம்மால் உருவாக்கப்பட்ட புதிய அரசியல் சாசனம் முழுமை அடைந்திருக்கும். அதனைக் குழப்புவதற்காகத்தான் அதற்கு தாமதத்தை ஏற்படுத்திக் குழப்பத்தை உருவாக்கினார்கள். அதனை நிறைவேற்றும் ஜனாதிபதியே வரவேண்டும்.

யார் அந்த ஜனாதிபதி? சஜித் பிரேமதாஸவா? கோட்டாபய ராஜபக்சவா? இது எம் மத்தியில் இருக்கின்ற கேள்வி.

2005 தொடக்கம் 2015 வரை நாங்கள் கடந்து வந்த பாதைகளைப் பார்க்கும்போது இந்தப் பயணம் எங்கு முடியும்? எனவே, இது அதி முக்கியமான தேர்தல். எனவே, தமிழ் மக்கள் எல்லோரும் வாக்களிக்க வேண்டும்.

எமது இனத்தவர், உறவுகள், பொதுக்கள் எல்லோரையும் வாக்களிக்க ஊக்குவித்து வாக்களிக்க வேண்டும்.

இந்தத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால், நாங்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு அவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் செயற்பட வேண்டும்.

எமது நியாயமான நிலைப்பாட்டை உணர்ந்திருக்கும் சர்வதேச சமூகம் எங்களுடன் இருக்கின்றபோது எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக இருந்தால் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வருவது அதற்கு உதவாது. அதற்குப் பாரிய பாதகத்தை ஏற்படுத்தும்.

எனவே, இதனை உணர்ந்து, எல்லோரையும் உணர வைத்து, எல்லோரும் ஒற்றுமையாகச் சேர்ந்து வாக்களித்து சஜித் பிரேமதாஸவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 82 சதவீதமான வாக்குகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கிடைத்தன. இம்முறை சஜித் பிரேமதாஸவுக்கு 90 சதவீதமான வாக்குகள் கிடைக்க வேண்டும்” – என்றார்.

மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ஞா. ஸ்ரீநேசன், சீ.யோகேஸ்வரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

தமிழ் மக்கள் தங்களது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால் எதிர்வரும் 16ஆம் திகதி ‘அன்னம்’ சின்னத்துக்கு வாக்களித்து சஜித் பிரேமதாஸவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனும் மையக்கருத்தில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உரையாற்றனார்கள். அத்துடன், எவ்வாறு ‘அன்னம்’ சின்னத்துக்கு வாக்களிப்பது என்கிற விளக்கத்தையும் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு அவர்கள் தெளிவுபடுத்தினர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading