Lead NewsLocal

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் களமிறக்கப்பட்டமை மகிழ்ச்சி! – விக்கி நேசக்கரம்

“ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவைத் தேர்ந்தெடுத்தமை எனக்குத் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியை ஊட்டுகின்றது.”

– இவ்வாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கேள்வி – பதில் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“சஜித் இளம் வயதினர். கொழும்பு றோயல் கல்லூரியில் தாராள மனப்பாங்குடைய ஆரம்பகாலக் கல்வியைப் பெற்றவர். அடிப்படையில் கொழும்பு றோயல் கல்லூரிக் கல்வியும், அவரின் பௌத்த மதப் பின்னணியும் மேலும் இலண்டன் பொருளாதாரக் கல்லூரியிலும் வேறு கல்லூரிகளிலும் அவர் பெற்ற கல்வியுமானது அவருக்கு ‘வாழ் மற்றவரையும் வாழவிடு’ என்ற மனோநிலையைக் கொடுத்திருக்கும் என்று நம்புகின்றேன்.

புத்தரின் போதனைகள்

தருண சவிய மூலம் இளைஞர்களுடன் அவர் வெற்றி கண்டுள்ளார். ஜனசுவய, சசுனட அருண போன்றவற்றையும் அவர் நடத்தியுள்ளார். அவருக்கு ஒரு கெட்டியான பௌத்த பின்னணி இருப்பது வரவேற்கத்தக்கது.

ஆனால், ஒரு சில விடயங்கள் அவர் தமிழர் மீது தன்னுறுதியில்லாத மனோநிலையைக் கொள்ளக் கூடியவாறு அமைந்திருக்கலாம். அவரின் தந்தையார் தமிழ்ப் போராளிகளின் வன்முறைக்கு இலக்கானார் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை ஒரு காரணம்.

அடுத்தது நிறுவனமயப்படுத்தப்பட்ட பௌத்தத்துக்கும் புத்தரின் போதனைகளுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தை அவர் உணர்ந்து கொண்டுள்ளாரோ தெரியவில்லை. எமது அரசமைப்பானது புத்தரின் போதனைகளை ஆங்காங்கே உட்புகுத்தியிருக்கலாம். ஆனால், நிறுவனப்படுத்தப்பட்ட பௌத்தத்துக்கு முன்னுரிமை கொடுத்தமை தவறென்று நான் பலமுறை கூறியுள்ளேன். நிறுவனமயப்படுத்தப்பட்ட பௌத்தம் வேறு புத்த பெருமானின் போதனைகள் வேறு.

தமிழ் பௌத்தர்கள்

முல்லைத்தீவில் பொதுபலசேனா இயற்றிய கூத்துக்கள் நிறுவனமயப்படுத்தப்பட்ட பௌத்தத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை வெளிக்கொண்டுவருகின்றன. அவற்றின் குற்றவியல் தன்மையையும் வெளிக்காட்டி நிற்கின்றன.

மேலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அவரின் ‘இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு’ என்ற அதி தீவிர சிந்தனை தடையாக இருக்கலாம். ஆனால், அவர் ஒன்றை நினைவில்கொள்ள வேண்டும். இந்த நாடு சிங்கள பௌத்தர்களுக்குரிய நாடு அல்ல. புத்தர் காலத்துக்கு முன்பிருந்தே இந்த நாடு சைவத் தமிழ் நாடாக இருந்தது. பௌத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதே தமிழ் இந்துக்கள் மத்தியில் தான். மேலும் சிங்கள மொழியானது நடைமுறைக்கு வந்தது கி.பி. 6ஆ ம் அல்லது 7ஆம் நூற்றாண்டிலேயே. இன்று 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொல்பொருள் சார்ந்த பௌத்த எச்சங்கள் என்று கூறப்படுபவை தமிழ் பௌத்தர்கள் கால எச்சங்கள்.

சுயாட்சி

இன்று நாட்டின் 75 சதவிகிதமானவர்கள் சிங்கள் பௌத்தர்கள் என்பது உண்மையே. ஆனால், வடக்கு, கிழக்கின் 85 சதவிகிதத்திலும் அதிகமானவர்கள் தமிழ்ப் பேசும் மக்களே. எங்களைப் பொறுத்தவரையில் எந்த மதத்திற்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே எமது நிலைப்பாடு.

வடக்கில் இந்து சமயமானது ஆதிகாலந் தொட்டு கோலோச்சி வந்துள்ளது. அது மற்றைய மதங்கள் யாவற்றையும் மதிக்கும் ஒரு சமயம். ‘உண்மை ஒன்று அதை ஞானிகள் பல நாமங்களால் குறிப்பிடுகின்றார்கள்’ என்பதே இந்து மக்களின் கருத்து வெளிப்பாடு. அதனால்தான் வடக்கு, கிழக்குத் தமிழ்ப் பேசும் மக்கள் தமக்கு பிரிக்கப்படாத நாட்டினுள் சுயாட்சியைக் கோருகின்றார்கள்.

அவரின் தந்தையை நான் அறிந்திருந்தேன். தன் தந்தையாரின் செயலாற்றல் திறமையை மகன் பெற்றிருந்தால் இதுவரையில் ‘தேசிய அபிமானிகள்’ என்ற வகையில் ஆட்சி ஓச்சியவர்களில் இருந்தும் வித்தியாசமான ஒருவராக சஜித் சிறந்து விளங்க முடியும்.

இதுவரையில் ஆட்சி ஓச்சியவர்கள் அறிவுடைமையையும் உணர்வுடைமையையும் வெளிக்காட்ட முடியாதவர்களாகவே இருந்தார்கள். தன்னால் பின்னப்பட்ட மேற்கூறப்பட்ட வலையில் இருந்து சஜித் விடுபட்டாரானால் எல்லா மக்களும் பாராட்டும் அதி சிறந்த ஜனாதிபதியாக வரக்கூடிய தகைமைகள் கொண்டவர் அவர் என்பது எனது கருத்து. ஜனாதிபதியின் அதிகாரங்கள் அண்மையில் கத்திரிக்கப்பட்டிருந்தாலும் அவர் தனது சிறப்பை வெளிக்காட்டக்கூடியவர் என்பதே எனது கருத்து” – என்றுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading