Lead NewsLocal

அரசியல் இலாபங்களைத் தவிர்த்து தீர்வுகாண சகலரும் முன்வாருங்கள்! – சம்பந்தன் அழைப்பு

“அற்ப அரசியல் இலாபங்களைக் கருத்தில்கொள்ளாது, எமது நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் நோக்கத்தோடு, தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வரவேண்டும் என இந்த நாட்டின் அரசியல் தலைவர்களை அழைத்து நிற்க விரும்புகிறேன்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள தமிழ் – சிங்களப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“தமிழ் – சிங்களப் புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

எமது நாட்டில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றிணைந்து கொண்டாடும் சித்திரைப் புத்தாண்டானது நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு என்பவை இந்த இரண்டு சமூகங்களுக்கும் இடையில் மேம்படுவதற்குக் கிடைக்கப்பெற்ற ஒரு வரப்பிரசாதமான பண்டிகையாகும்.

துரதிஷ்டவசமாக எமது நாட்டில் அத்தகைய நம்பிக்கையைக் கடந்த காலங்களில் கட்டியெழுப்ப முடியவில்லை. அதன் விளைவாக இன்றும் மக்கள் பல்வேறு துன்பங்களையும் வேதனைகளையும் அனுபவித்து வருகிறார்கள். அதுமாத்திரமன்றி இரண்டு சமூகங்களுக்கும் இடையிலான விரிசல் அதிகரித்துள்ளதேயன்றிக் குறையவில்லை.

மேலும், இந்தப் புத்தாண்டு நாளில், அற்ப அரசியல் இலாபங்களைக் கருத்தில்கொள்ளாது, எமது நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் நோக்கத்தோடு, தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வரவேண்டும் என இந்த நாட்டின் அரசியல் தலைவர்களை அழைத்து நிற்க விரும்புகிறேன்.

எமது எதிர்காலச் சந்ததியினருக்கு வளம்மிக்கதும், நீதியையும், நேர்மையையும் நிலைநாட்டும் ஓர் இலங்கைத் தீவை உருவாக்குவது எமது கடமையாகும்.

எனவே, இந்த சித்திரைப் புத்தாண்டு நாளில் இந்தத் தலையாய கருமத்தை நிறைவேற்ற இன, மத, கட்சி வேறுபாடின்றி உழைப்பதற்கு முன்வருமாறு அனைத்து மக்களிடமும் வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன்” – என்றுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading