Lead NewsLocal

ஜனாதிபதி வேட்பாளருக்கு சரத் பொன்சேகாவே தகுதி! – மஹிந்தவின் சகா குமார வெல்கம அதிரடிக் கருத்து

“போருக்குப் பயந்து நாட்டைவிட்டு ஓடியவரே கோட்டாபய ராஜபக்ச. இவர் ஜனாதிபதி வேட்பாளர் என்ற தகுதிக்குப் பொருத்தமற்றவர். எனவே, தேசிய பாதுகாப்பை முன்னிலைப்படுத்தியே ஜனாதிபதி வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டுமெனில் அதற்கு முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே தகுதியானவர்.”

– இவ்வாறு அதிரடிக் கருத்தைத் தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகாவும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம.

களுத்துறையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த நாட்டில் பாதுகாப்பு தொடர்பில் சரத் பொன்சேகாவுக்கே போதிய அனுபவம் உள்ளது. போர் முடிவடையும் வரை அவர் சேவையில் இருந்தவர்.

ஆனால், உதய கம்மன்பில கூறும் நபரான கோட்டாபய ராஜபக்ச போர்க் காலத்தில் நாட்டை விட்டு அமெரிக்காவுக்கு ஓடியவர். இப்படிப்பட்டவர் அதிகாரத்துக்கு வந்தால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.

அப்படியானால் 2010ஆம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகா ஏன் தோல்வியடைந்தார் என நீங்கள் கேள்வி எழுப்பலாம். இலவசக் கல்வியை அறிமுகப்படுத்திய சி.டபிள்யூ.சி.கன்னங்கரவையே தேர்தலில் தோற்கடித்த நாடு இது. இதை நாம் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading