Local

சவேந்திரவை இராணுவத் தளபதியாக்கி மக்களுக்கு ஜனாதிபதி துரோகமிழைப்பு! – கடுமையாகச் சாடுகின்றார் சூக்கா

இலங்கையின் இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதைக் கண்டித்துள்ள யஸ்மின் சூக்காவின் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம், இந்த நியமனத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி துரோகம் இழைத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா வெளிநாடுகளுக்குப் பயணிப்பதற்கு – உத்தியோகபூர்வ பயணங்களை மேற்கொள்வதற்குக்கூட, நுழைவிசைவுகளை மறுக்குமாறு கோருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“ஒரு மோசமான போர்க்குற்றவாளியாக குற்றம்சாட்டப்படும் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்து, ஜனாதிபதி நாட்டுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சவேந்திர சில்வாக்கு எதிராக போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், அவரது இந்த நியமனம் நல்லிணக்க செயல்முறைகளையும் முடிவுக்குக் கொண்டு வரப்படுவதை அடையாளப்படுத்துகின்றது.

அத்துடன், அவருக்கு அளிக்கப்பட்டுள்ள பதவி உயர்வு நாடு முழுவதும் அச்சத்தைத் தூண்டும். குறிப்பாக, 2009ஆம் ஆண்டில் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் மேற்பார்வையில் பொதுமக்கள் மீதான தாக்குதல்களில் பெரும் இழப்பை சந்தித்த நூற்றாயிரக்கணக்கான தமிழர்களிடையே, அச்சத்தை ஏற்படுத்தும்.

எண்பதுகளின் பிற்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சியை நசுக்குவதில் தனது பங்குக்காக சவேந்திர சில்வா ஒருபோதும் பொறுப்புக்கூறவில்லை.

இதன்போது, படுகொலைகள், காணாமல் ஆக்கப்படுதல்கள், சித்திரவதை, பாலியல் வன்முறைகள், ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பான நம்பகமான குற்றச்சாட்டுகள் உள்ளன.

அப்போது, கோட்டாபய ராஜபக்சவின் தலைமையின் கீழ், 1 ஆவது கஜபா ரெஜிமென்ட்டில், சவேந்திர சில்வா பணியாற்றியிருந்தார்” – என்றுள்ளது.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading