கடமையைப் புறக்கணித்து கரங்களைப் பலப்படுத்துக! – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அழைப்பு
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் வடக்கு மாகாணத்தில் நாளை திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது.
“கொடிய போரால் காணமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக அவர்களின் உறவினர்கள் தொடர்ந்தும் போராட்டங்கள் நடத்திவரும் நிலையில் அவர்களில் பலர் ஏமாற்றம் அடைந்து இறந்துவிடும் சம்பவங்களும் தொடர்கின்றன.
இந்தநிலையில் நாளை வடக்கு மாகாணம் தழுவிய பூரண ஹர்த்தால் போராட்டத்தை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுக்கவுள்ளனர். வடக்கு மாகாணம் முற்றாக முடங்கும் வகையில் அந்தப் போராட்டம் அமைய வேண்டும் என்று அவர்கள் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அத்தகைய ஜனநாயகவ ழிப போராட்டத்துக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முழுமையான ஆதரவை வழங்குகின்றது.
வடக்கு மாகாணப் பாடசாலைகளில் கடமை புரியும் அதிபர்கள், ஆசிரியர்கள் நாளை திங்கட்கிழமை கடமைகளைப் புறக்கணித்து பூரண ஆதரவை வழங்குமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பணிவுடன் கேட்டுள்ளது.
மாணவர்களை வீடுகளில் அமைதியாக இருக்க வழியேற்படுத்துமாறு பெற்றோரை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விநயத்துடன் கேட்டுள்ளது” – என்று அந்தச் சங்கம் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
