LocalSports

23 ஓட்டங்களினால் வென்றது இலங்கை! – போராடித் தோற்றது மேற்கிந்தியத்தீவுகள்

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில், மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது.

நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

இதனையடுத்து இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக திமுத் கருணாரத்ன மற்றும் குசல் பெரேரா களமிறங்கினர்.

இருவரும் இணைந்து நிதானமாக ஆடி ஓட்டங்களைச் சேர்த்தனர். இதில் திமுத் கருணாரத்ன 32 ஓட்டங்களில் ஆட்டமிழக்க அரைச்சதம் அடித்த குசல் பெரேரா 64 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் கைகோர்த்த அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் குசல் மெண்டிஸ் அணியின் ஓட்ட எண்ணிக்கையை மேலும் உயர்த்தினர். இதில் குசல் மெண்டிஸ் 39 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மெத்யூஸ் 26 ஓட்டங்களில் ஆட்டமிழக்க தொடர்ந்து பொறுப்பாக ஆடி தனது சதத்தைப் பதிவு செய்து அசத்திய அவிஷ்கா பெர்னாண்டோ, 103 பந்துகளில் 104 ஓட்டங்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்துக் களமிறங்கிய இசுரு உதனா 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் தனஞ்ஜெயா டி சில்வா 6 ஓட்டங்களுடனும், திரிமன்னே 45 ஓட்டங்களுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 338 ஓட்டங்களை எடுத்தது.

மேற்கிந்தியத்தீவுகள் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஜாசன் ஹோல்டர் 2 விக்கெட்டுக்களும், பாபியன் ஆலென், காட்ரெல் , ஒஷானே தாமஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 339 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் சார்பில் கிறிஸ் கெயில் மற்றும் சுனில் அம்ரிஷ் ஆகியோர் முதலாவதாகக் களமிறங்கினர். அதில் சுனில் அம்ரிஷ் 5 ஓட்டங்களில் வெளியேற, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷாய் ஹோப் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கிறிஸ் கெயில் 35 ஓட்டங்களும், ஹெட்மயர் 29 ஓட்டங்களும், ஜேசன் ஹொல்டர் 26 ஓட்டங்களும், பிரித்வெயிட் 8 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர்.

இதனிடையே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகோலஸ் பூரன் தனது அரைச்சதத்தைப் பதிவு செய்தார். அடுத்ததாக நிகோலஸ் பூரனுடன் ஆலன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தியது.

இந்த ஜோடியில் அதிரடி காட்டிய ஆலன் 51 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய பூரன் 92 பந்துகளில் தனது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.

அடுத்ததாக நிகோலஸ் பூரனுடன் காட்ரல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் அணியின் ஓட்டங்கள் வேகமாக உயர்ந்தது. இந்த ஜோடியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிகோலஸ் பூரன் 118 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்துக் களமிறங்கிய தாமஸ் ஓர் ஓட்டத்துடன் வெளியேறினார்.

இறுதியில் கேப்ரியல் 3 ஓட்டங்களும், காட்ரல் 7 ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

முடிவில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 50 ஒவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 315 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணியின் சார்பில் அதிகபட்சமாக லசித் மலிங்க 3 விக்கெட்டுகளும், மெத்யூஸ், ரஜிதா மற்றும் வாண்டர்சே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியில் இலங்கை அணியின் சார்பில் 104 ஓட்டங்கள் குவித்த அவிஷ்கா பெர்னாண்டோ ஆட்டநாயகனாகாத் தெரிவானார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading