Local

இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றம் புரியவில்லை! – ரணிலின் கருத்துக்கு அவரது சகாவே பதிலடி

“ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமுமே இராணுவம் மீது குற்றச்சாட்டை முன்வைக்கின்றன. ஆனால், இராணுவம் போர்க்குற்றங்களை ஒருபோதும் இழைத்ததில்லை.”

– இவ்வாறு அடித்துக் கூறியிருக்கின்றார் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் சுஜீவ சேனசிங்க.

போர் புரிந்த இரு தரப்பும் குற்றமிழைத்துள்ளார்கள். மாறி மாறிக் குற்றச்சாட்டுக்களை சுமத்திக் கொண்டிருக்காமல் நடந்தவற்றை மறப்போம், மன்னிப்போம் என ஐ.தே.கவின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சியில் கருத்து வெளியிட்டு சில தினங்கள் கழிவதற்கு முன்பாகவே அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சுஜீவ சேனசிங்க இப்படிக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“போர்க் காலத்தில் விடுதலைப்புலிகளுடனான போரின்போது இராணுவத்தால் போர்க்குற்றங்கள் இழைக்கப்படவில்லை. அத்தோடு இராணுவம் போர்க்குற்றங்களை ஒருபோதும் இழைத்ததில்லை என்பதே அரசின் நிலைப்பாடு.

ஆனால், மனித உரிமை ஆணைக்குழுவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமுமே இராணுவம் போர்க்குற்றச்சாட்டை இழைத்ததாகவும் அதற்கான நீதி விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கூறுகின்றன.

எனினும், போர் முடிந்த பின் இந்த விடயம் தொடர்பாக நான் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்தேன். இருப்பினும் அந்த கூற்றுக்களில் எவ்வித உண்மையும் இல்லை” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading