Local

நல்லிணக்கத்தைக் குழப்பியடிக்கும் விக்கியின் கட்சியைப் புறக்கணிக்க வேண்டும் தமிழர்கள்! – அமைச்சர் பொன்சேகா வேண்டுகோள்

“வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடும் இனவாத நோக்குடன் புதிய கட்சியை ஆரம்பிக்கின்றார். நாட்டில் நல்லிணக்கத்தைக் குழப்பியடிக்கும் சிலரின் பட்டியலில் விக்னேஸ்வரனும் தற்போது இணைந்துள்ளார். எனவே, அவரின் புதிய கட்சியான தமிழ் மக்கள் கூட்டணிக்கு நான் ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டேன்.”

– இவ்வாறு அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

களனியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்சேகாவிடம் வடக்கில் விக்னேஸ்வரன் தலைமையில் உதயமாகும் புதிய கட்சி தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு மாகாண சபையில் விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவியில் இருந்தபோது தமிழ் மக்களுக்கு உருப்படியான சேவைகள் எதையும் செய்யவில்லை. ஊழல், மோசடிகள் அவரின் ஆட்சியில் தலைவிரித்தாடின. குற்றவாளிகளைக் காப்பாற்றும் நடவடிக்கையிலும் அவர் ஈடுபட்டார். அப்படியான ஒருவர் தற்போது புதிய கட்சியை ஆரம்பிக்கின்றார். தனது சுயநல அரசியலுக்காக கடும் இனவாத நோக்குடன் புதிய கட்சியை அவர் ஆரம்பிக்கின்றார். நாட்டில் நல்லிணக்கத்தைக் குழப்பியடிக்கும் சிலரின் பட்டியலில் தற்போது விக்னேஸ்வரனும் இணைந்துள்ளார். எனவே, அவரின் புதிய கட்சியான தமிழ் மக்கள் கூட்டணிக்கு நான் ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டேன். அதேவேளை, தமிழ் மக்களும் இது தொடர்பில் விழிப்புடன் இருக்கவேண்டும். இனவாதத்தைத் தூண்டி நல்லிணக்கத்தைக் குழப்படிப்பவர்களைத் தமிழ் மக்கள் தூக்கியெறிய வேண்டும்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading