EastLocal

ஆசை வார்த்தை காட்டி மாணவியை வன்புணர்ந்த ஆசிரியர் சிக்கினார்!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் 16 வயது மாணவி ஒருவரை ஆசை வார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவரை நேற்றிரவு கைதுசெய்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

மண்டூர் பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11இல் கல்வி கற்று வரும் மாணவியை அப்பாடசாலையில் கடமையாற்றி வரும் பெரியநீலாவணை பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 32 வயதுடைய ஆசிரியர் நீண்ட நாட்களாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார் என பாதிக்கப்பட்ட மாணவி நேற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து குறித்த ஆசிரியரை பொலிஸார் கைதுசெய்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் வேலைவாய்ப்புப் பெற்று வெளிநாடு சென்றுள்ள நிலையில், அவர் அம்மம்மாவுடன் வாழ்ந்து வருகின்றார்.

இந்தநிலையில், குறித்த ஆசிரியர் மாணவிக்கு கையடக்க தொலைபேசி ஒன்றை வாங்கிக் கொடுத்து அதனூடாக மாணவிக்கு ஆசை வார்த்தை காட்டி பாடசாலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் பிரத்தியோக கல்வி நடவடிக்கையின்போது பாடசாலையில் வைத்தும் ஏனைய இடங்களுக்கு வரவழைத்தும் பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட ஆசிரியரை முழுமையான விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

(அம்பாறை நிருபர் சரவணன்)

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading