FeaturesLead NewsLocal

தமிழரின் அபிலாஷைகளை நிறைவேற்ற 13ஆவது திருத்தத்தை செயற்படுத்துங்கள்! – கோட்டா முன்னிலையில் மோடி இடித்துரைப்பு

“இலங்கையில் தமிழ் மக்களின் சமத்துவம், நீதி, சமாதானம், கௌரவம் ஆகியவை குறித்த அபிலாஷைகளை நிறைவேற்றும் நல்லிணக்க நடைமுறையை புதிய அரசு முன்னெடுக்கும் என்று நான் எதிர்பார்க்கின்றேன். அதில் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது மிகவும் அவசியம்.”

– இவ்வாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இன்று மேற்கொண்ட பேச்சின் பின்னர் நடத்திய இணை செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையின் ஜனாதிபதியான பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எமது அழைப்பையேற்று இந்தியாவுக்கு முதல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு வந்ததையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். அவருக்கு ஒட்டுமொத்த இந்திய மக்களின் சார்பாக வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்தியா இலங்கையின் மிகவும் நெருக்கமான நண்பன். இன்று நாங்கள் இரு நாட்டின் பாதுகாப்புக் குறித்து கலந்துரையாடினோம்.

உயிர்த்த ஞாயிறு தினமன்று இலங்கை மீது நடத்தப்பட்ட தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இந்தியா எப்போதும் பயங்கரவாதத்தை எதிர்க்கின்றது. பயங்கரவாதத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்காக இந்தியா 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்குக் கடனாக வழங்கவுள்ளது.

மேலும், இலங்கையின் உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்திக்காக 400 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் கடனாக இந்தியா வழங்கவுள்ளது.

இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் இலங்கையில் 46 ஆயிரம் வீடுகளைக் கட்டியுள்ளோம். மேலும் 14 ஆயிரம் வீடுகள் அங்குள்ள மக்களுக்காகக் கட்டப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சூரிய சக்தி மூலம் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளும் திட்டங்களுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் இலங்கைக்கு இந்தியாவால் வழங்கப்படும்.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி, இந்திய வம்சாவழித் தமிழர் பகுதி அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு போன்றவற்றுக்கான இந்தியாவின் உதவிகள் தொடரும்.

இலங்கையில் நல்லிணக்கம் குறித்த எங்கள் கருத்துக்களை இன்று பரிமாறிக்கொண்டோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இன நல்லிணக்கம் குறித்த தனது அரசியல் கண்ணோட்டத்தைப் பற்றி என்னிடம் கூறினார். நல்லிணக்க நடைமுறையில் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதும் அடங்கும். அது மிகவும் அவசியம்.

இலங்கையில் தமிழ் மக்களின் சமத்துவம், நீதி, சமாதானம், கௌரவம் ஆகியவை குறித்த அபிலாஷைகளை நிறைவேற்றும் நல்லிணக்க நடைமுறையை புதிய அரசு முன்னெடுக்கும் என்று நான் எதிர்பார்க்கின்றேன்.

நாங்கள் அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையைப் பின்பற்றுகின்றோம். அந்தவகையில், ஸ்திரமான மற்றும் வளமான முன்னேற்றகரமான இலங்கை இந்தியாவின் நலனுக்கு மிகவும் உகந்த விடயம். இது முழு இந்து சமுத்திரத்துக்கும் நன்மையளிக்கக்கூடிய விடயமாகும்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading