Lead NewsLocal

முஸ்லிம் மக்கள் மீது நாளாந்தம் கெடுபிடி! – ஜனாதிபதியிடம் முஸ்லிம் அரசியல்வாதிகள் நேரில் சுட்டிக்காட்டு

“முஸ்லிம் மக்கள் மீது நாளாந்தம் கெடுபிடிகள் அதிகரித்து வருகின்றன. நீங்கள் விடுதலை செய்த ஞானசார தேரர் உலமா சபையை விமர்சித்து முஸ்லிம் மக்களுக்கு எதிராகக் கடுந்தொனியில் பேசி வருகின்றார். ஜனாதிபதி என்ற ரீதி யில் உடனடியாக நீங்கள் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.”

– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அவரது இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை நடந்த கூட்டத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், பெளசி, பைசர் முஸ்தபா, அமீர் அலி, அப்துல்லா மஹ்ரூப், அலிசாஹிர் மெளலானா, பைசல் காசீம், மன்சூர், இஸ்மாயில் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை ரிஷாத் பதியுதீன் எம்.பி. விளக்கினார்.

அவர் தெரிவிக்கையில்,

“ஞானசார தேரரை விடுவித்தது ஜனாதிபதி. இன்று தேரர் எமது உலமா சபையை விமர்சித்து கருத்துக்களை வெளியிடுவது குறித்து நாங்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டோம். இதை எங்களால் ஏற்கமுடியாது என்று கூறினோம்.

அதேபோல் குருணாகல் வைத்தியர் ஷாபி மற்றும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாதவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினோம்.

அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் சுட்டிக்காட்டினோம்.

இந்த விடயங்களைக் கவனமாகக் கேட்டுக் கொண்ட ஜனாதிபதி அவை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக எம்மிடம் உறுதியளித்துள்ளார்” – என்றார்.

ஜனாதிபதியை நேற்று சந்திக்க முன்னர் இந்த எம்.பிக்கள் பிரதமரையும் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading