Lead NewsLocal

நீதிபதிகள் குழாம் முன்பாக கோட்டாவுக்கு எதிரான மனு! – புதனன்று நடக்கவுள்ள விசாரணையால் ராஜபக்ச அணியினர் கடும் அதிர்ச்சி

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை இலங்கைப் பிரஜையாக ஏற்றுக்கொள்வதைத் தடுக்குமாறு கோரி முன்வைக்கப்பட்ட மனுவை மூன்று நீதிபதிகள் கொண்ட குழு முன்னிலையில் நாளைமறுதினம் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி யசந்த கோதகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த மனுவில் உள்ளடங்கும் காரணங்கள் அரசியல் ரீதியாக முக்கியமானவை என்பதால் அந்த மனுவை மூவரங்கிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்துவது சிறந்தது என மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி யசந்த கோதகொட தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி யசந்த கோதகொட, அர்ஜுன ஒபேசேகர மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் நாளைமறுதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன் குறித்த மனுவின் பிரதிவாதிகளான குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர், ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர், உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன மற்றும் குறித்த அமைச்சின் செயலாளர் ஆகியோரை அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பேராசிரியர் சந்திரகுப்தா தெனுவர மற்றும் காமினி விஜயங்கொட ஆகியோர் குறித்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர், ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர், உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன, குறித்த அமைச்சின் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் இரகசியப் பொலிஸ் பணிப்பாளர் ஆகியோர் குறித்த மனுவின் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்ததாகக் கூறி இந்த நாட்டு கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுள்ளார் என்று குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முறையான குடியுரிமைச் சான்றிதழைச் சமர்ப்பிக்காமல் இந்தக் கடவுச்சீட்டை அவர் பெற்றுள்ளார் என்று தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது எனத் தெரிவித்துள்ள மனுதாரர்கள், குறித்த கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை சட்டத்திற்கு முரணான விதத்தில் வழங்கப்பட்டுள்ளன எனவும் கூறியுள்ளார்கள்.

இதனால் கோட்டாபய ராஜபக்சவுக்கு கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்குவதைத் தடுக்கும் விதமான உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறும், குறித்த மனுவின் விசாரணை முடியும் வரையில் குறித்த கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்துவதைத் தடுத்து இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறும் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு மீது நாளைமறுதினம் விசாரணை இடம்பெறும் என மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து ராஜபக்ச அணியினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading