தமிழ் இனப்படுகொலையை ஒருபோதும் மறக்கமுடியாது! – ரணிலின் கருத்துக்கு மனோ தக்க பதிலடி
“தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை ஒருபோதும் மறக்க முடியாது. அதனை மன்னிப்பது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மக்களே தீர்மானிக்க முடியும்.”
– இவ்வாறு தெரிவித்துள்ளார் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன்.
வடக்குக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, போரின்போது இரு தரப்பினரும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் எனவும், இந்தச் சம்பவங்களை மறப்போம் மன்னிப்போம் எனவும் கூறியிருந்தார். இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், இந்த விடயம் தொடர்பாகக் கருத்து வெளியிடும்போதே அமைச்சர் மனோ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
“இனப்படுகொலை மறக்கக்கூடிய விடயம் அல்ல. வரலாற்றை மறக்காமலிருந்தாலேயே மீண்டும் அவ்வாறான தவறுகள் இடம்பெறாமல் தடுக்க முடியும். ஆனால், மன்னிப்பதா? இல்லையா? என்பதை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களே முடிவு செய்ய வேண்டும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
