EastLocal

தன்மானத்தைக் காவு கொடுக்கும் அபிவிருத்திக்கு துணை நிற்கோம்! – ஸ்ரீநேசன் எம்.பி. தெரிவிப்பு

“அரசிடமிருந்து கெளரவமான முறையில் நிதியைப் பெற்று அபிவிருத்திகளைச் செய்யவேண்டுமே தவிர, தன்மானத்தை காவுகொடுத்து விட்டு மேற்கொள்ளும் அபிவிருத்திகளுக்குத் துணைபோகமாட்டோம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

கம்பெரலிய திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு – குருமண்வெளி பகுதியில் புனரமைக்கப்பட்ட வீதி திறந்து வைக்கப்பட்டது. இதில் ஸ்ரீநேசன் எம்.பி. பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்று அரசு நிமிர்ந்து நிற்பதற்கு கூட்டமைப்பே காரணம். அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியாகச் செயற்பட்டிருக்காவிட்டால் இன்று தேர்தல் காலமாகவே இருந்திருக்கும்.

புலம்பெயர்ந்த உறவுகள் கூறுவதைப்போல கடும்போக்கைக் கடைப்பிடிக்க முடியாது. காரணம், மீண்டும் வன்முறைகள் உருவாகுமானால் அதனைத் தாங்கும் சக்தி தமிழ் மக்களிடம் இல்லை.

இந்நிலையில், இருக்கின்ற ஜனநாயகப் பெரும்பான்மைப் பலத்தை வைத்துக்கொண்டு சாணக்கியமான பாதையில் சென்று, உரிமைகளைப் பெறவேண்டிய நிலையில் உள்ளோம்.

குறிப்பாக கடந்த கால அரசியல் சூழ்நிலையின்போது கூட்டமைப்பை நடுநிலை வகிக்குமாறு சிலர் கூறினர். அவ்வாறு செய்திருந்தால் இன்று மஹிந்த ஆட்சியமைத்திருப்பார்.

யார் வெல்லவேண்டும் என்பதைவிட யார் தோற்கடிக்கப்படவேண்டும் என்பதில் தமிழ் மக்கள் இம்முறை கவனமாக உள்ளனர்.

அந்தவகையில் கடந்த 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்காமல் விட்ட தவறை மீண்டும் செய்யாமல் சரியான தீர்மானங்களை மக்களுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading