Uber Eats தற்போது கேகாலைக்கும் வந்துள்ளது
Uber Eats தனது சேவைகளை கேகாலையில் விரிவுபடுத்தியுள்ளதன் மூலம், அங்குள்ள மக்களும் சுற்றுலாப் பயணிகளும் தங்களுக்குப் பிடித்த உணவு வகைகளைத் தங்கள் இருப்பிடத்திற்கே தற்போது வரவழைத்துக் கொள்ள முடியும். இந்தச் சேவை அன்றாட உணவுத் தேவைகளில் புதிய வசதியை வழங்குகிறது. மக்கள் உள்ளூர் உணவகங்கள் மற்றும் மளிகைக் கடைகளில் இருந்து தங்களுக்குத் தேவையானவற்றை ஓர்டர் செய்யலாம். அலுவலகத்தில் மதிய உணவிற்காகத் தயாராகச் சமைத்த உணவுகளைப் பெறுவது முதல், குடும்பத்துடன் இரவு உணவை உண்பது அல்லது வீட்டிலேயே சமைப்பதற்கான மூலப்பொருட்களை வாங்குவது என அனைத்திற்கும் இது உதவும்.
கொழும்பு-கண்டி பாதையில் அமைந்துள்ள கேகாலை, உள்ளூர் வணிகங்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் அருகிலுள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் பயணிகளால் எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஒரு மையமாகும். Uber Eats மூலம், மக்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே நகரத்தின் பல்வேறு உணவு வகைகளை ஆராயலாம். கொத்து, சோறு மற்றும் கறி போன்ற இலங்கை உணவுகள் முதல் இந்திய, சீன மற்றும் பிற சர்வதேச உணவு வகைகள் வரை பலவற்றிலிருந்து அவர்கள் தங்களுக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
நுகர்வோருக்குக் கிடைக்கும் இந்த வசதி மட்டுமின்றி, கேகாலையில் உள்ள உணவக உரிமையாளர்களுக்கும் இது புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. இந்தச் செயலியில் ஏராளமான உணவகங்கள் இடம்பெற்றுள்ளதால், உள்ளூர் உணவகங்கள் தங்கள் பகுதிக்கு அப்பால் உள்ள வாடிக்கையாளர்களையும் சென்றடைய முடியும். அதேபோல், விநியோகப் பங்காளர்களுக்கும் இந்தத் தளத்தின் மூலம் நெகிழ்வான முறையில் வருமானம் ஈட்ட வாய்ப்புகள் கிடைக்கின்றன.
Uber Sri Lanka நிறுவனத்தின் விநியோக சேவைப் பிரிவுக்கான உள்நாட்டு முகாமையாளர் வருண் விஜேவர்தன கூறுகையில்: “கேகாலையில் Uber Eats சேவையை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். இது மக்கள் தங்களுக்குப் பிடித்த உணவுகளை எளிதாகப் பெற்றுக்கொள்ள உதவுவதுடன், உள்ளூர் உணவகங்களின் வளர்ச்சிக்கும் துணைபுரியும். ஒவ்வொரு புதிய நகரமும், நுகர்வோரை உள்ளூர் வணிகங்களுடன் இணைப்பதற்கும், விநியோகப் பங்காளர்களுக்கு நெகிழ்வான வருமான வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இலங்கை முழுவதும் உள்ள பல சமூகங்களுக்கு விநியோக சேவையை கொண்டு சேர்க்கும் எங்கள் பயணத்தில், கேகாலை ஒரு முக்கிய சாதனை மைல்கல்லாகும்.”
இந்த அறிமுகமானது, இலங்கை முழுவதும் Uber Eats மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகும். ஏற்கனவே நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் பதுளை போன்ற நகரங்களில் தனது சேவையைத் தொடங்கியுள்ள Uber Eats, நாட்டின் மிகப்பெரிய நகர்ப்புற மையங்களுக்கு அப்பால், மேலும் பல சமூகங்களுக்கு உணவு விநியோக சேவையை விரிவுபடுத்தி வருகிறது

You must be logged in to post a comment.