FeaturesLead NewsLocal

ஐ.நா. மனித உரிமை ஆணையர் இலங்கை அரசுக்கு எச்சரிக்கை! – சவேந்திர சில்வா நியமனத்தால் அதிருப்தி

லெப். ஜெனரல் சவேந்திர சில்வா, இலங்கை இராணுவத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து கவலை வெளியிட்டுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர், இது ஐ.நா. அமைதிப்படையில் இலங்கையின் பங்கெடுப்பைப் பாதிக்கக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“போரின்போது, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவும், அவரது படைகளும் சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்களில் ஈடுபட்டதான தீவிரமான குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், அவர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து நான் மிகவும் குழப்பமடைந்துள்ளேன்.

சவேந்திர சில்வா முன்னர் இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டமை கவலை தரும் நிலைமை என்று 2019 மார்ச்சில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியிருந்தேன்.

2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில், இலங்கை இராணுவத்தின் 58ஆவது டிவிசனுக்கு லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கியிருந்தார்.

அவரது படைப்பிரிவு, சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்ட மீறல்களில் ஈடுபட்டதாக, ஐ.நா. விசாரணை அறிக்கைகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நீதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 30/1 தீர்மானத்தின்போது, இலங்கை அளித்த வாக்குறுதிகள் விடயத்தில், லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் மோசமான நிலைமையை ஏற்படுத்தும்.

இது நல்லிணக்க முயற்சிகளைச் சீர்குலைப்பதுடன், குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்களையும், போர்ப் பாதிப்பில் உயிர்தப்பியவர்களையும், மிக மோசமாகப் பாதிக்கும். இது பாதுகாப்புத் துறை மறுசீரமைப்புக்கும் பின்னடைவை ஏற்படுத்தும்.

அத்துடன், ஐ.நா. அமைதிகாப்பு முயற்சிகளில் இலங்கை தொடர்ந்து பங்களிப்புச் செய்வதிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்” – என்றுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading