Lead NewsLocal

கொழும்புக்கு வந்துள்ள ஐ.நா. குழு படை முகாம்களுக்குள் நுழையும்?

கொழும்பு வந்துள்ள சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா. உப குழுவில் உள்ள நிபுணர்கள் இலங்கை இராணுவ முகாம்களுக்குள் நுழைய அனுமதி கோரலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வரும் நிலையிலேயே, இலங்கை இராணுவ முகாம்களுக்குள் நுழைந்து பார்வையிடுவதற்கு ஐ.நா. நிபுணர் குழு முயற்சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா. உப குழு முதல் முறையாக நேற்றுக் கொழும்பு வந்தது. இந்தக் குழு எதிர்வரும் 12ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து ஆய்வுகளை நடத்தவுள்ளது.

ஐ.நாவின் நான்கு நிபுணர்களைக் கொண்டு இந்தக் குழுவினர், பொலிஸ் தடுப்பு நிலையங்கள், சித்திரவதைக் கூடங்களாக இருந்த இராணுவ மற்றும் கடற்படை முகாம்களுக்கும் சென்று பார்வையிட வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

எனினும், இந்தக் குழு நுழைந்து பார்வையிடக் கோரவுள்ள இடங்கள் தொடர்பாகக் கருத்து வெளியிடுவதற்கு, சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா. உப குழுவின் மனித உரிமைகள் அதிகாரி ஆர்மென் அவெரிஸ்யான் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

“இந்தப் பயணம் தொடர்பாக எந்தத் தகவலையும் வழங்கக் கூடிய நிலையில் நான் இல்லை. சித்திரவதைகளுக்கு எதிரான உப குழுவின் பணி இரகசியத்தன்மை கொள்கையின் அடிப்படையில் வழி நடத்தப்படுகின்றது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், நீதித்துறை ஆணைக்குட்பட்ட அனைத்து இடங்களுக்கு ஐ.நா. குழுவை எந்தவொரு அரசும் அனுமதிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும் என்றும் ஆர்மென் அவெரிஸ்யான் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading