FeaturesLead NewsLocal

ஒற்றுமையே தமிழர் பலம்! – சம்பந்தன் சுட்டிக்காட்டு

“ஒற்றுமைதான் தமிழர்களுடைய பலம். இதைத் தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழர்கள் ஒற்றுமையில்லாமல் இருப்பார்களேயானால் அவர்கள் பலவீனமடைவார்கள். சமீபத்தில்கூட நாட்டில் பலவிதமான நெருக்கடிகள் ஏற்பட்டபோது, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்ப் பிரதிநிதிகள், விசேடமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலமாகத் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்ப் பிரதிநிதிகள், ஒற்றுமையாக ஒருமித்து செயற்பட்ட காரணத்தின் நிமித்தம், நாங்கள் எமது பலத்தை நிரூபிக்கத்தக்கதாக இருந்தோம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

“நாட்டில் அண்மையில் ஏற்பட்ட சில பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாகப் பாதுகாப்பு நிலைமைகள் இன்னும் மோசமடைந்துள்ளன. இந்த நிலைமையிலிருந்து நாடு மீளவேண்டும்; மீளப்பெறச் செய்ய வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தினார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன், மேலும் கூறுகையில்,

“தமிழ் மக்களைப் பெறுத்தவரையில் அவர்கள் நீண்ட காலமாக பல்வேறு வன்முறைகளுக்கு உள்ளாகி வந்திருக்கின்றார்கள். தமிழர்களுடைய உரிமைப் போராட்டம் சம்பந்தமாக, அரசியல் தீர்வு பெறுவதற்குப் பல முயற்சிகள் எடுக்கபப்பட்டு, பல முன்னேற்றங்கள் ஏற்பட்ட போதிலும்கூட அது இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.

அது சம்பந்தமாக விரைவில் ஒரு முடிவு வர வேண்டும். அதற்கான எமது முயற்சிகள் தொடர்கின்றன. தமிழ் மக்கள் பலமாய் இருப்பதற்கு அவர்கள் மத்தியில் ஒற்றுமை நிலவ வேண்டியது அத்தியாவசியம். பல்வேறு காரணிகள் நிமித்தம் மக்கள் மத்தியில் எல்லாக் கருமங்களிலும் ஒருமித்த கருத்து இருப்பது ஒரு கடினமான விடயம்.

ஆனால், தமிழ் மக்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒற்றுமைதான் அவர்களுடைய பலம். அவர்கள் ஒற்றுமையில்லாமல் இருப்பார்களேயானால் அவர்கள் பலவீனமடைவார்கள்.

சமீபத்தில்கூட நாட்டில் பலவிதமான நெருக்கடிகள் ஏற்பட்டபோது, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்ப் பிரதிநிதிகள், விசேடமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலமாகத் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்ப் பிரதிநிதிகள், ஒற்றுமையாக ஒருமித்து செயற்பட்ட காரணத்தின் நிமித்தம், நாங்கள் எமது பலத்தை நிரூபிக்கத்தக்கதாக இருந்தோம்.

இந்த வருடத்தில் தேர்தல்கள் நடைபெறும். மாகாண சபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என்பன நடைபெற வேண்டும். வருகின்ற வருடத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறலாம் அல்லது அதற்கு முன்பாகவும் நடைபெறலாம்.

இந்தவிதமான கருமங்கள் நடைபெறுகின்றபோது தமிழ் மக்கள் ஒருமித்து ஒற்றுமையாக தங்களுடைய செயற்பாட்டின் மூலமாக தங்களுடைய பலத்தை பிரதிபலிக்கக் கூடிய நிலைமையை ஏற்படுத்த வேண்டும்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாங்கள் எடுக்க வேண்டிய அத்தனை முயற்சிகளையும் எடுத்திருக்கின்றோம். அரசியல் கைதிகளை அரசு விடவில்லை என நாங்கள் சொல்ல முடியாது. ஐம்பது வீதமானவர்கள் விடுபட்டிருக்கின்றார்கள். மற்றவர்களின் விடுதலையில் தாமதங்கள் இருக்கின்றன. அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவித்தால் பெரும்பான்மை மக்களின் மத்தியில் சில அரசியல்வாதிகள் அதனை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, ஆட்சியிலுள்ளவர்களுக்கு நெருக்குதல்களை ஏற்படுத்துவார்கள் என்பதன் நிமிர்த்தம், அதில் தாமதங்கள் இருக்கின்றன. ஆனால், எமது முயற்சி அந்த விடயம் சம்பந்தமாகத் தொடர்கின்றது.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரரேரணை தொடர்பில் எமது கட்சி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், எமது நாடாளுமன்றக் குழு கூடி உரிய நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவை நாங்கள் எடுத்து அதை மக்களுக்கு அறிவிப்போம்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading