FeaturesLead NewsLocalNorth

மீண்டும் தடை தகர்த்த மாணவர் படை! – யாழ். பல்கலைக்கழக மாவீரர் தூபியில் இன்று சுவாலை விட்டெரிந்தன சுடர்கள்

 

யாழ். பல்கலைக்கழகத்தின் மாவீரர் நினைவுத் தூபியில் இன்று மாலை 6.05 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு வீரமறவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாவீரர் நாளையொட்டி இன்றும் நாளையும் யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் உட்செல்ல பல்கலைக்கழக அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமியால் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த தடை உத்தரவையும் தாண்டி தற்றுணிவுடன் உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்குப் பெருமளவு மாணவர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

அத்துடன், யாழ். பல்கலைக்கழக வளாகத்திலிருந்து இன்று பிற்பகல் 2 மணியுடன் கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைவரையும் வெளியேறுமாறு நிர்வாகம் பணித்தது. அவ்வாறிருக்கையில் இன்று மாலை பல்கலைக்கழக நினைவுத் தூபியில் சுடர்கள் கொழுந்து விட்டெரிந்தன.

பொதுச் சுடரை மூன்று மாவீரர்களின் தந்தை ஒருவர் ஏற்றிவைத்தார். பொதுச் சுடரேற்றலைத் தொடர்ந்து மாவீரர் துயிலும் இல்லப் பாடல் இசைக்க நினைவேந்தலில் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவரும் ஈகச் சுடர்களை ஏற்றி அஞ்சலி செய்தனர்.

அதேவேளை, இன்று முற்பகலும் தடைகளைத் தகர்த்தெறிந்துவிட்டு யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் வந்த மாணவர்கள் மாவீரர் நினைவுத் தூபியில் மலர் தூபி அஞ்சலி செலுத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading