Local

மஹிந்தவின் பதவி ஆசைக்கு எதிராக மக்கள் போர்க்கொடி! – அடுத்த வாரம் மாபெரும் போராட்டம் என ரணில் தெரிவிப்பு

மஹிந்த ராஜபக்‌ஷவின் பிரதமர் ஆசைக்கு, பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவிக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மக்கள் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்க வேண்டும் எனவும் கோரினார்.

நீதிமன்றம், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருந்த புதிய பிரதமருக்கும் புதிய அமைச்சரவைக்கும் எதிராக, இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளதென்றும் இவற்றுக்கு, நிறைவேற்று அதிகாரம் செவிசாய்க்காவிட்டால், மக்கள் பலத்தைக் காட்டவும் தயாராகவுள்ளதாகவும், அவர் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்களுக்கு, தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்தும் கூட்டமொன்று, அலரி மாளிகையில், நேற்று (10) இடம்பெற்றது. இதன்போதே, ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்துரைத்த அவர்,

“கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட அரசமைப்புக்கு முரணான செயற்பாடு, இன்று மக்கள் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இது, மக்கள் உரிமையைத் திருடும் செயற்பாடாகும். பிரதமர், அமைச்சர்களைப் பதவி நீக்கியதால், மக்களே நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர் என்றார்.

நாடாளுமன்றப் பெரும்பான்மை உள்ளவர்களுக்கே பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும். அந்த பெரும்பான்மையை யாருக்கு வழங்க வேண்டுமென்பதை, மக்களே தீர்மானிப்பர்.

மறைந்த தலைவர் டி.எஸ்.சேனநாயக்கவின் காலத்திலிருந்து, இதுவே நடைமுறையில் உள்ளது. பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளும் தரப்புக்கு மதிப்பளித்தே பிரதமரைத் தெரிவுசெய்து வந்தோம்.

அதற்கமையவே, 2003ஆம் ஆண்டில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சியின் போது, பிரதமராகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இன்று, நாடாளுமன்றத்தின் அனுமதி பெறப்படாமல் பிரதமரை நீக்கி, அமைச்சரவையைக் கலைத்துவிட்டு ஆட்சிச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

மஹிந்த ராஜபக்‌ஷவும் நாடாளுமன்றத்தைப் புறந்தள்ளிவிட்டுச் செயற்பட்டார். அதனால், இன்று நாடளாவிய ரீதியில் மக்கள் எதிர்ப்பு வெளிப்பட ஆரம்பித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ புறக்கணிக்கப்பட்ட நிலையில், அதற்குப் புறம்பாகச் செயற்படும் அதிகாரம் அவருக்கு இல்லை. மஹிந்தவின் பிரதமர் ஆசைக்கு எதிராக, பெரும் மக்கள் எதிர்ப்பு வெளிப்பட ஆரம்பித்துள்ளது.

ஒக்டோபர் 26ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதியின் சட்டவிரோத செயற்பாடுக்கு எதிரான முன்வந்த அணியினர், தற்போது பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளனர்.

நல்லாட்சியில் குறைபாடுகள் இருந்தன. நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளும் உள்ளன. அதற்கமையவே, அரசு சிறந்ததா? இல்லையா? என்ற தீர்மானத்தை மக்கள் எடுப்பர். அதனைத் தீர்மானிக்கும் அதிகாரம் வேறு தரப்புகளுக்கு இல்​லை.

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தில், சுயாதீன ஆணைக்குழுக்களைப் பலப்படுத்தியதன் விளைவாக நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மை மேம்பட்டுள்ளது. அதனால்தான், நாம் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். அதேபோல், அண்மைய நாட்களில் அரசியல்வாதிகளின் பங்கேற்புகள் இல்லாத பல எதிர்ப்புப் போராட்டங்களும் இடம்பெற்று வருகின்றன. அதேபோல் நீதிமன்றத் தீர்ப்பு கிடைக்கப்பெற்ற பின்னர், மக்கள் பலத்தைக் காண்பிக்கும் மாபெரும் போராட்டத்தை நடத்துமாறு, சிவில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதற்கமைய, குறித்த போராட்டம் அடுத்த வாரம் வரை பிற்போடப்பட்டுள்ளது. இது, மக்கள் போராட்டமாகவே அமையும். எனவே, அச்சமின்றி மக்கள் வாழக்கூடிய ஆட்சியை முன்னெடுக்க வேண்டும்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading