Local

விக்கியின் கூட்டணியில் இணையவேமாட்டோம்! – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவிப்பு

“கொள்கையில் திடமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்காத தரப்புக்களுடன் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டணி வைத்துள்ள நிலையில், வெறுமனே ஒற்றுமைக்காக மட்டும் அவருடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இல்லை” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் இந்த அறிவிப்பை விடுத்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். இந்த கட்சி அறிவிப்புக் கூட்டம் நேற்றுமுன்தினம் நல்லூர் நடராசா பரமேஸ்வரி மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளவில்லை.

இது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறுவதுடன், அவருடைய புதிய கட்சி தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் தீர்வைத் தமிழ் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ் மக்கள் ஒற்றுமையை விரும்புகிறார்கள். அதனை நாங்களும் விரும்புகிறோம். ஆனால், அந்த ஒற்றுமை என்பது கொள்கை ரீதியான ஒற்றுமையாக அமைய வேண்டுமே தவிர கண்ணை மூடிக்கொண்டு எல்லோரும் ஒன்றாகச் சேர்வதல்ல. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பொறுத்தவரை அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய காலம் தொடக்கம் கொள்கை ரீதியான ஒன்றுமை என்பதில் உறுதியாக இருக்கிறது.

முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கட்சி விடயத்திலும் அதுவே நடந்திருக்கிறது. குறிப்பாக முன்னாள் முதலமைச்சரின் தரப்பினர் தமிழ் மக்கள் கூட்டணியில் இணைந்து கொள்வது தொடர்பாக எங்கள் கட்சியுடன் பேச்சு நடத்தியிருந்தார்கள். அப்போது நாங்கள் ஒரு விடயத்தைக் கூறினோம். அதாவது தமிழ் மக்கள் கூட்டணியில் சுரேஷ் பிரேமச்சந்திரன் இருப்பாராக இருந்தால், குறிப்பாக கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கும் நிலையில், இருப்பாராக இருந்தால் அவ்வாறான கூட்டணியில் இணைந்து கொள்ள நாங்கள் தயாராக இல்லை என்று கூறினோம். அவ்வாறு நாங்கள் கூறியமைக்கு நியாயம் இருக்கின்றது.
கண்ணை மூடிக்கொண்டு அவ்வாறான கருத்தை நாங்கள் கூறவில்லை. அல்லது ஒற்றுமையை விரும்பாமல் அவ்வாறான கருத்தை நாங்கள் கூறவில்லை. ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் இணைந்து உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் ஒரு ஆக்கபூர்வமான கூட்டை உருவாக்க முயற்சித்தபோது அதனை அவர் குழப்பினார். இதனால் எதிர்காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூட்டணி அமைப்பதில்லை என்பது எமது கட்சியின் தீர்மானம்.

அது ஒரு பக்கம் இருக்க சுரேஷ் பிரேமச்சந்திரனின் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து இன்றளவும் விலகவில்லை. மறுபக்கம் நெடுங்கேணிப் பிரதேச சபை, வவுனியா நகரசபை போன்ற இடங்களில் அரச கட்சிகளுடனும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தரப்புடனும் கூட்டிணைந்து ஆட்சியைப் பிடித்தது. இதற்கும் மேலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரனும், அவருடைய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் இணைந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த பின்னர் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தார்கள்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னவெல்லாம் செய்கிறதோ அதனையே சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்றளவும் செய்து கொண்டிருக்கிறார். எனவே, சுரேஷ் பிரேமச்சந்திரனும் இருக்கும் ஒரு தரப்புடன் நாங்களும் ஒற்றுமை வேண்டும் என இணைந்து கொள்வோமானால் அது போலியான ஒற்றுமை மட்டுமே. இது எங்கள் கட்சியின் நிலைப்பாடாக உள்ளது. இதனை நாங்கள் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சார்பில் எங்களுடன் பேச வந்தவர்களுக்குக் கூறியுள்ளோம்.

அதற்கு அவர்கள் கூறிய பதில் சுரேஷ் பிரேமச்சந்திரன் இல்லாத கூட்டணி அமையாது என்பதே. அதற்கு பின்னரும் நாங்கள் கூறினோம். சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்குத் தகுந்த வாய்ப்பை கொடுக்கலாம். ஆனால், அவர் கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கும் இடத்தில் இருக்க முடியாது என்று. அதற்கும் மறுப்பு வந்துள்ள நிலையில், துரதிஷ்டவசமாக சி.வி.விக்னேஸ்வரனின் கட்சியுடன் இணைந்து பயணிக்க முடியாது என்பதை நாங்கள் இப்போது கூறியுள்ளோம்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading