FeaturesLead NewsLocal

இலங்கை அரசின் வாக்குறுதிகள் கிடப்பில்! இனியும் கைகட்டி வேடிக்கை பார்க்கவேகூடாது சர்வதேசம்!! – அகாசியிடம் சம்பந்தன் நேரில் இடித்துரைப்பு

“இலங்கை அரசு சர்வதேச சமூகத்துக்குப் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதிலும் அவற்றில் எதுவும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. சர்வதேச சமூகம் இனிமேலும் வெறும் பார்வையாளர்களாக – கைகட்டி வேடிக்கை பார்ப்பவர்களாக இருக்க முடியாது.”

– இவ்வாறு சுட்டிக்காட்டினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

ஜப்பானின் உயர் இராஜதந்திரியும் ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாகிகளில் ஒருவருமான யசூசி அகாசி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்றுக் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளபோதும் அதற்குக் காரணமாக அமைந்த தமிழ் மக்களின் கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் சர்வதேச சமூகம் பாரிய பங்களிப்பை அரசுக்கு வழங்கியிருந்தது. எனினும், இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வை எட்டுவது தொடர்பில் இலங்கை அரசு சர்வதேச சமூகத்துக்குப் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதிலும் அவற்றில் எதுவும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

சர்வதேச சமூகம் இனிமேலும் வெறும் பார்வையாளர்களாக – கைகட்டி வேடிக்கை பார்ப்பவர்களாக இருக்க முடியாது. வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசுக்கு நினைவூட்டி – அழுத்தம் கொடுத்து அவற்றை நிறைவேற்றச் செய்வது சர்வதேச சமூகத்தின் கடமையாகும்.

இந்த வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்றத் தவறுகின்ற பட்சத்தில் அது தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல மாறாக முழு நாட்டுக்கும் கேடானதாக அமையும்” – என்றார்.

இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகிரா சுகியாமா மற்றும் தூதரக அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading