Lead NewsLocal

அரசியல் கைதிகளை விடுவிக்காமல் சர்வதேசத்திடம் இராணுவத்துக்குப் பொதுமன்னிப்பு கோருவது நீதியா? – முன்னாள் அமைச்சர் பஷீர் கேள்வி

“உள்நாட்டில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கத் தயார் இல்லாத ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உலக நாடுகளிடம் இருந்து ஸ்ரீலங்கா இராணுவத்துக்கு பொதுமன்னிப்பு கோரி இருப்பது இயற்கை நீதிக்குப் புறம்பான விடயம் ஆகும்.”

– இவ்வாறு ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும் உற்பத்தி திறன் ஊக்குவிப்பு முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

ஏறாவூர் இளைஞர் கழக சம்மேளனத்தைச் சேர்ந்த இளையோர்களை தனது ஏறாவூர் இல்லத்தில் இன்று திங்கட்கிழமை சந்தித்துப் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தச் சந்திப்பில் விசேட அழைப்பின் பெயரில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.

பஷீர் சேகுதாவூத் இங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரையின் சுருக்கம் என்னவென்றால் ஸ்ரீலங்கா இராணுவத்துக்கு உலக நாடுகள் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்பதே ஆகும். அவ்வாறு கோருவதற்கான அவரின் தார்மீக உரிமையை நாம் தவறாகப் பார்க்கவில்லை. ஆனால், உள்நாட்டில் தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கத் தயார் இல்லாத அவர் உலக நாடுகளிடம் இருந்து ஸ்ரீலங்கா இராணுவத்துக்குப் பொதுமன்னிப்பு கோரி இருப்பது இயற்கை நீதிக்குப் புறம்பான விடயம் ஆகும்.

உள்நாட்டில் தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்குகின்ற அதிகாரம் அவரிடம் உள்ளபோதும் அவர் அதைச் செய்யாமல் ஸ்ரீலங்கா இராணுவத்துக்குப் பொதுமன்னிப்பு வழங்குங்கள் என்று சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையில் கோரி உள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவாக இருந்தாலும் சரி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவாக இருந்தாலும் சரி, ஏன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவாக இருந்தாலும் சரி சிங்கள மக்களின் வாக்குகளை இலக்கு வைத்ததே அரசியலை செய்கின்றார்கள் என்பது வெளிப்படையான உண்மையாக உள்ளது. அதேநேரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமிழ் பேசும் மக்களுக்கு எதையும் கொடுக்கத் தேவை இல்லை என்கிற நிலைப்பாட்டில் காணப்படுகின்றனர். ஏனென்றால் அவர்களிடம் தேர்தல் காலங்களில் தமிழ்பேசும் அரசியல் தலைமைகள் பூரண சரணாகதி அடைந்து விடுகின்ற வழக்கத்தைக் கொண்டிருக்கின்றன என்கிற யதார்த்தத்தை முற்றிலும் உணர்ந்து வைத்திருக்கின்றனர். முஸ்லிம் அரசியல் தலைமைகள் குறித்து பேசவே தேவை இல்லை.

மிக நீண்ட காலமாக அரசியல் கைதிகளாக மறியல் சாலைகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் தமிழ் இளையோர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கத் தயார் இல்லாத சிங்கள பௌத்த பேரினவாத பெருந்தேசிய அரசு இனப்பிரச்சினைக்கான தீர்வை எங்ஙனம் வழங்கும்? இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்போவதும் இல்லை; அரசியல் அமைப்பு மாற்றம் அதுவாக கிட்டப் போவதும் இல்லை. ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ் பேசும் மக்களே உள்ளார்கள்.

மலையகத் தமிழர்கள் அடங்கலாக தமிழ் பேசும் மக்களின் ஆதரவைப் பெற்றால் அன்றி 50.1 சதவீத வாக்கை எந்த சிங்களத் தலைவரும் தனித்துப் பெற்று வெற்றி அடைய முடியாது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழர்கள் வாக்களிப்பைப் புறக்கணித்து ஜனாதிபதித் தேர்தலின் முடிவை மாற்றிய சரித்திரம் உள்ளது. அதேபோல தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் காரணமாக ஜனாதிபதி மாற்றப்பட்ட வரலாறும் கண்முன் நடந்தேறி உள்ளது.

எனவே, தமிழ் பேசும் மக்கள் எடுப்பார் கைப்பாவைகளாக இருக்காமல் நிதானமாக சிந்தித்துச் செயற்பட்டு ஒன்றித்து வாக்களித்து இந்நாட்டின் ஜனாதிபதியைத் தீர்மானிக்கின்றபோது தவிர்க்க முடியாத அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டுவிடும். அப்போது அரசியலமைப்பை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் நேரும்.

இவ்விதம் சிங்கள பௌத்த பெரும்பான்மை பேரினவாத பெருந்தேசிய தலைமையை அரசியல் அமைப்பு மாற்றத்துக்கு நிர்ப்பந்திப்பதன் மூலமே எதிர்காலத்தில் தமிழ்பேசும் மக்களின் இருப்பு, உரிமை, பாதுகாப்பு ஆகியவற்றைப் பாதுகாத்து இந்நாட்டில் சமபிரஜைகளாக கௌரவத்துடன் வாழ முடியும்.

இளையோர்கள் இந்நாட்டின் எதிர்காலத் தலைவர்கள் ஆவர். இவர்களுக்கு சமுதாயம் குறித்த பிரக்ஞையும், பொதுநல அக்கறையும் அத்தியாவசியமாக உள்ளன. சமுதாயத்தை இளைஞர்கள் படிக்க வேண்டி உள்ளது. சமுதாயத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களைப் படிக்க வேண்டியுள்ளது. இன்று போதைப்பொருள் பாவனை சமுதாயத்தை ஊடறுத்து நிற்கின்றது. போதைப்பொருள் அற்ற சமுதாயத்தை உருவாக்க இளைஞர்கள் முன்னின்று உழைக்க வேண்டும் என்று இத்தருணத்தில் கேட்டுக்கொள்கின்றேன்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading