LocalNorth

உண்ணாவிரதக் கைதிகளுக்காக பண்டத்தரிப்பிலும் போராட்டம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் யாழ். பண்டத்தரிப்பு சந்தியின் சுற்றுவட்டத்துக்கு அருகில் பண்டத்தரிப்பு மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு முன்பாக நடைபெறவுள்ளது.

குறுகிய காலப் புனர்வாழ்வு வழங்கியாவது தங்களை விரைவில் விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த மாதம் 14ஆம் திகதி தொடக்கம் அனுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் அனைத்துச் சிறைகளுக்கும் விரிவடைந்துள்ளது.

அவர்களின் கோரிக்கைகள் அரசால் நிறைவேற்றப்படவேண்டும், வருடக் கணக்காக முறையான விசாரணையோ அல்லது விடுதலையோ இல்லாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் உயிர்களைக் காக்கவேண்டும், அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையற்ற வகையில் உடனடியாக விடுதலை செய்யவேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விலக்கிக்கொள்ளவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் யாழ். மாவட்ட வெகுஜன அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக மட்ட அமைப்புக்களையும், மனிதநேயமுள்ள சமூக செயற்பாட்டாளர்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading