Lead NewsLocalNorth

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கை அரசை உடன் நிறுத்துக! – வடக்கில் நிறைவேறியது தீர்மானம்

2019 மார்ச் மாதத்துக்கு முன்னர் ஐ.நா. தீர்மானங்களை முழுமையாகச் செயற்படுத்தத் தவறினால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அல்லது விசேடமாக உருவாக்கப்படும் நியாயச் சபைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை உட்பட 5 தீர்மானங்கள் அடங்கிய பிரேரணை வடக்கு மாகாண சபையின் 131ஆவது அமர்வில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் கடந்த அமர்வில் முன்மொழியப்பட்ட இந்தப் பிரேரணையை மேலும் வலுப்படுத்தும் பொறுப்பு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா மற்றும் உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், கே.சயந்தன், அயூப் அஸ்மின் ஆகியோர் அடங்கிய குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

வலுப்படுத்தப்பட்ட பிரேரணை நேற்று நடைபெற்ற அமர்வில் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் முன்மொழியப்பட்டது.

அதில், ஐ.நா. தீர்மானங்களைச் செயற்படுத்த இலங்கை அரசு தவறியுள்ளது. எனவே, வடக்கு மாகாண சபையானது பின்வருமாறு தீர்மானம் நிறைவேற்றுகின்றது:

1.இலங்கையானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் 30/1, 34/1 ஆகியவற்றை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இதுவரை விரும்பாமையால் இலங்கை மேற்குறிப்பிட்ட தீர்மானங்களை
2019 மார்ச் மாதத்திற்கு முன்னர் முழுமையாக அமுல்படுத்தத் தவறுமாயின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அல்லது விசேடமாக உருவாக்கப்படும் நியாயச் சபைக்கோ கொண்டு செல்வதன் பொருட்டு ஐ.நா. பொதுச் சபைக்கும் ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கும் கொண்டு செல்லுமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளை இந்தச் சபையானது கோருகின்றது.

2. போரால் பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் நிலை, காணாமல்போனோர், தமிழ் அரசியல் கைதிகள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தொடரும் கட்டுப்பாடில்லாத தடுத்துவைப்பு, தமிழ்ப் பிரதேசங்களில் பெருமளவிலான பாதுகாப்புப் படைகள் நிலைகொண்டுள்ளமை மற்றும் வடக்கு – கிழக்குப் பிராந்தியத்திலுள்ள தனியார் காணிகளில் பாதுகாப்புப் படைகள் தரித்திருக்கின்றமை ஆகியவற்றைக் கண்காணிப்பதன் பொருட்டு இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையிடும் பிரதிநிதி ஒருவரை நியமிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை சபை கோருகின்றது.

3. கணிசமான முன்னேற்றம் ஏற்படும் வரை இலங்கை மீது இராணுவத் தடைகளை விதிப்பதற்கு ஐ.நா. பாதுகாப்புச் சபையை வலியுறுத்துமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை இச்சபை கோருகின்றது.

4.போரில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு நுழை விசைவை நிராகரிக்குமாறும், ஐ.நா. உயர்ஸ்தானிகரால் மனித உரிமைகளுக்கான 2018 பெப்ரவரி 26 – மார்ச் 23 ஆம் திகதியிடப்பட்ட அவருடைய அறிக்கையில் முன்மொழியப்பட்டவாறான சர்வதேச நியாயாதிக்கத்தின் பிரயோகம் அடங்கலாக ஏனைய வழிமுறைகளை ஆராயுமாறும் ஐ.நா.சபையின் சகல அங்கத்துவ நாடுகளையும் இச்சபை கோருகின்றது.

5.இலங்கை, தமிழ் பேசும் மக்களுக்குரிய சமத்துவமான அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கு விரும்பாமையாலும், தவறியுள்ளமையாலும், கடந்த கால வன்முறையின் மீளெழுகையைத் தவிர்ப்பதன் பொருட்டு எந்தவொரு அர்த்தமுள்ள முயற்சியையும் முன்னெடுப்பதற்குத் தவறியுள்ளமையாலும், ஓர்
நிலையான அரசியல் தீர்வைக் காண்பதை நோக்காகக் கொண்டு தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷையைத் தீர்மானிப்பதன் பொருட்டு வடக்கு – கிழக்குப் பிராந்தியத்தில், ஐக்கிய நாடுகள் சபேரவையின் கண்காணிப்புடன் கூடிய பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்துமாறு ஐ.நா. பேரவையின் உறுப்பு நாடுகளை இந்தச் சபையானது கோருகின்றது – என்றுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading