Local

தீர்ப்புக்காகக் காத்திருக்கும் சர்வதேச நிதி நிறுவனங்கள்! – சீனாவும் கைவிரிப்பு

அரசியல் நெருக்கடிகளால், இலங்கைக்கு கடன் வழங்க இணங்கிய பல சர்வதேச நிதி நிறுவனங்கள், தமது முடிவுகளை இடைநிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல்கள். வெளியாகியுள்ளன.

தற்போதைய அரசியல் இழுபறிகளால், சட்டரீதியான அரசு தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன.

இதனால் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகும் வரை, தமது கடன்கள் தொடர்பான முடிவுகளை எடுப்பதை சர்வதேச நிதி நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன.

இலங்கை அரசு எதிர்வரும் ஜனவரி தொடக்கம் ஏப்ரல் மாதத்துக்கிடையில், 1.5 பில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது.

இதில் ஒரு பில்லியன் டொலர் வரும் ஜனவரி 15ஆம் திகதி செலுத்தப்பட வேண்டும். இதற்காக, சீன அபிவிருத்தி வங்கியிடம் 500 மில்லியன் டொலரைக் கடனாகப் பெறுவதற்கான பேச்சுக்கள் நடத்தப்பட்டிருந்தன.

ஆனால், அரசின் சட்டபூர்வ தன்மை தொடர்பான இழுபறியினால், இந்தக் கடனை சீன அபிவிருத்தி வங்கி நிறுத்தி வைத்துள்ளது. ஏற்கனவே சீன அபிவிருத்தி வங்கியிடும் இலங்கை அரசு ஒரு பில்லியன் டொலரை கடனாகப் பெற்றுள்ளது.

“சீனாவிடம் கடனைப் பெறுவதற்கு பேச்சு நடத்தினோம். ஆனால், இலங்கையின் நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்புக்காக காத்திருக்கின்றோம் என்று சீனா அரச தரப்பினர் தெரிவித்துள்ளனர்” என்று இலங்கை அதிகாரி ஒருவர் கூறினார்.

“நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை, யாரும் எங்களுக்குக் கடன் கொடுக்கப் போவதில்லை. அவர்கள் அரசியல் சூழ்நிலை தெளிவாக உள்ளதா என்பதை அவர்கள் பார்க்க விரும்புகின்றார்கள்.

நாங்கள் உங்களுக்கு கடன் கொடுக்கமாட்டோம் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால், நாங்கள் முதலில் தெளிவுபடுத்த விரும்புகின்றோம் என அவர்கள் சொல்கிறார்கள்” என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் நெருக்கடிகளினால் சர்வதேச நாணய நிதியமும், அடுத்த கடன் தவணைக்கான பேச்சுக்களை இடைநிறுத்தி வைத்துள்ளது.

2016இல், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர் கடனை மூன்று ஆண்டுகளில் கட்டம் கட்டமாக வழங்க இணங்கியிருந்தது.

அதில் 1 பில்லியன் டொலர் இன்னமும் வழங்கப்படாத நிலையில், தெளிவான அரசு அமைக்கப்படும் வரை காத்திருப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading