தேர்தலை நடத்துமாறு மைத்திரி நெருக்குவாரம் கொடுத்தால் ஆணைக்குழு உறுப்பினர்கள் பதவியைத் துறப்பதற்கு முடிவு!
நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தொடர்ந்தும் நெருக்குவாரம் கொடுத்தால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களும் பதவி துறப்பதற்கு முடிவு செய்துள்ளனர் என்று அறியமுடிகின்றது.
தமது முடிவை அரசின் உயர்மட்டங்களுக்கும் அறிவிப்பது என்று அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் கலைக்கப்படும் வர்த்தமானி அறிவிப்பு நேற்றுமுன்தினம் நள்ளிரவு வெளியிடப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் ஜனவரி 5ஆம் திகதி நடத்தப்படும் என்றும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜனாதிபதியின் திடீர் அறிவிப்பையடுத்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களும், தேர்தல்கள் செயலகத்தில் நேற்று மதியம் ஆராய்ந்தனர். சுமார் 3 மணி நேரம் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி அரசமைப்புக்கு முரணாகவே நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார் என்று ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டியுள்ளார். அரசமைப்புக்கு முரணாக தேர்தல் நடத்த முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். உயர்நீதிமன்றத்தில் பல தரப்பும் வழக்குகளைத் தாக்கல் செய்யவுள்ளதாகக் கூறுகின்றன. உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை கவனத்தில் எடுத்துச் செயற்படவேண்டும் என்பதை ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மூவரையும் பதவி நீக்கம் செய்வதற்கும் இரகசிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை அரசமைப்புக்கு முரணாக நடத்துமாறு ஜனாதிபதியால் பணிக்கப்பட்டால் அல்லது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டால் பதவி துறப்பேன் என்று ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் தவிசாளரிடம் தெரிவித்துள்ளார். இதன்போது, யாராவது ஒருவர் பதவி துறக்கும் முடிவை எடுத்தாலும், மூன்று உறுப்பினர்களும் பதவியைத் துறப்பது என்று தீர்மானித்துள்ளனர் என்று அறியமுடிகின்றது. இதனை அரச உயர்மட்டத்துக்கு தெரியப்படுத்தவும் ஆணைக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
